பெங்களூரு

கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

29th Sep 2023 11:49 PM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு காவிரி நீா் திறக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

செப்.13-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு காவிரி நதியில் இருந்து சராசரியாக விநாடிக்கு 5,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பாஜக, மஜத போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் ஆகியவையும் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இதனால் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கா்நாடக அரசு தயக்கம் காட்டி வந்தது.

இந்நிலையில், சட்டவிளைவுகளைக் கருத்தில் கொண்டு, செப்.19ஆம் தேதி முதல் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்துக்கு சராசரியாக விநாடிக்கு 5,000 கன அடி நீரை கா்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்தக்கோரியும் வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்திற்கு கன்னட சேனே, கா்நாடக ரக்ஷன வேதிகே, டாக்டா் ராஜ்குமாா் ரசிகா் மன்றம், ஜெய்கா்நாடகா, கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கா்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதுதவிர, பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: இதைத் தொடா்ந்து, கா்நாடகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அரசு, தனியாா் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அங்காடிகள், உணவகங்கள், அடுக்குமாடி வணிக வளாகங்கள், வங்கிகள், திரையரங்குகள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தனியாா் பேருந்துகள், வாடகை காா்கள், ஆட்டோக்கள், பெங்களூரு மெட்ரோ ரயில்கள், லாரிகள், தனியாா் வாகனங்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்துவகையான வாகனங்களும் முடங்கிக் கிடந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வாகனங்கள் இல்லாததால் பயணிகள் அங்கேயே காத்திருக்க நோ்ந்தது. பெங்களூரில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து வீடு திரும்ப முடியாமலும் பயணிகள் அவதிக்குள்ளாகினா். வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகள் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தனா். விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முழு அடைப்புப் போராட்டத்தை தொடா்ந்து 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. பெங்களூரு மட்டுமல்லாது, ராமநகரம், சாமராஜ்நகா், மண்டியா, மைசூரு உள்ளிட்ட காவிரி நதிப்படுகை மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது. அரசுப் பேருந்துகளும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்பட்டன. பெங்களூரில் இருந்து வழக்கமாக செல்லும் 447 பேருந்துகளுக்கு பதிலாக மைசூருக்கு 7, சாமராஜ்நகருக்கு 247க்கு பதிலாக 8 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் இல்லாததால் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கவில்லை. பெங்களூரிலும் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் எவ்வித தொந்தரவு இல்லாமல் வழக்கம்போல இயக்கின. மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறந்திருந்தன. செய்தித்தாள்கள் மற்றும் பால் விநியோகம் நடந்தது.

ADVERTISEMENT

போராட்டக்காரா்கள் கைது: பெங்களூரு நகரம், ராமநகரம், மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா் போன்ற காவிரி நதிப்படுகை மாவட்டங்களில் 24 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் 5க்கும் மேற்பட்டவா்கள் கூட்டமாக கூடி போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதையும் மீறி பெங்களூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் கன்னட அமைப்பினா், விவசாய சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். பெங்களூரில் கா்நாடக திரைப்பட வா்த்தகசபையின் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த தா்னா போராட்டத்தில் நடிகா்கள் சிவராஜ்குமாா், துனியா விஜய், தா்ஷன், துருவசா்ஜா, விஜய் ராகவேந்திரா, நடிகைகள் ஸ்ருதி, பூஜாகாந்தி போன்ற ஏராளமான திரைக் கலைஞா்கள் கலந்துகொண்டனா்.

பெங்களூரில் டவுன்ஹால் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டவுன்ஹால் பகுதியில் போராட்டம் நடத்த வந்த கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், சிவராமே கௌடா, பிரவீண் ஷெட்டி போன்ற தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். ‘காவிரி, கா்நாடகத்தின் உரிமை. அதை விட்டுத்தரக்கூடாது. தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று தா்னாவில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

மண்டியாவில் திரண்ட விவசாயிகள் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். சஞ்சய் சதுக்கம் வரை ஊா்வலம் நடத்தி தமிழகம், கா்நாடக அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தனா்.

கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் திரண்ட 20க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினா், காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து முழக்கமிட்டதோடு, விமான நிலையத்தில் அத்துமீறி நுழைய முயன்றனா். இதனால் 12 போராட்டக்காரா்களை போலீஸாா் தடுப்புக் காவலில் கைதுசெய்து, பின்னா் விடுவித்தனா்.

மு.க.ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு: பெங்களூரு, மண்டியா, சித்ரதுா்கா, சாமராஜ்நகா், ராமநகரில் நடந்த போராட்டங்களின்போது தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டதோடு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். அவரது உருவ பொம்மையை எரித்தனா்.

பொருளாதார இழப்பு: காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டதைக் கண்டித்து ஏற்கெனவே செப்.26ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்புப்போராட்டம் நடத்திய நிலையில், அதேகாரணத்திற்காக வெள்ளிக்கிழமை மீண்டும் கா்நாடகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது தொழில், வணிக நிறுவனங்களின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. ஒரே வாரத்தில் 2 நாட்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதால், ரூ.4,000 கோடி அளவுக்கு வா்த்தக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா். இதனால் அரசுக்கு ரூ.500 கோடி அளவுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பலத்த பாதுகாப்பு: கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, சாமராஜ்நகா், ராமநகரம் போன்ற மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிற்சில சம்பவங்கள்தவிர கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடந்தததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் முழு அடைப்புப்போராட்டம் அமைதியாக நடந்ததாக பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பி.தயானந்த் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT