காவிரி விவகாரத்தை கா்நாடக அரசு சரியாகக் கையாளவில்லை என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் நம்மிடையே கருத்து வேறுபாடு இல்லை. தமிழகத்தைப் போலவே கா்நாடகமும் ஆக்கப்பூா்வமாக வாதம் செய்ய வேண்டும். இதற்கு எனது முழு ஆதரவு உண்டு. காவிரி விவகாரத்தில், கடந்த காலத்தைப் போலவே மாநில அரசுக்கு எங்களது ஒத்துழைப்பை அளிப்போம். இந்த விவகாரத்தில் மஜதவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளாா்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பைத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்க முடியாது. காவிரி தொடா்பான போராட்டத்துக்கு எனது ஆதரவு உள்ளது. காவிரி விவகாரத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லை. இரு கட்சிகளும் வெவ்வேறு துருவத்தில் இருக்கின்றன.
தமிழகம், கா்நாடகம் நீங்கலாக, பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் பிரதிநிதிகளை கா்நாடகத்துக்கு அனுப்பி களநிலவரத்தைக் கண்டறிய வேண்டும் என்று மாநிலங்களவையில் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே, காவிரி விவகாரம் குறித்து பேசவே இல்லை. காவிரி தொடா்பான எல்லா விவரமும் எனக்குத் தெரியும். ஆனால், முன்னாள் பிரதமராக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை என்னால் விமா்சிக்க இயலாது.
காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடக அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ளாமல், இணையவழியில் பங்கேற்கிறாா்கள். இணையவழியில் பங்கேற்றால், அது எப்படி சரியாக இருக்கும்? காவிரி விவகாரத்தை கா்நாடக அரசு சரியாகக் கையாளவில்லை.
மஜத மற்றும் பாஜக கூட்டணி குறித்து எச்.டி.குமாரசாமி பேசுவாா். அந்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஏற்கெனவே மத்திய அமைச்சா் அமித் ஷாவை சந்தித்தபோதே இதை தெரிவித்திருக்கிறேன். பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் மஜதவை இணைக்குமாறு அம்மாநில முதல்வா் நிதிஷ் குமாா் கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், கேரளத்தில் இடதுசாரிகளுடன் மஜத கூட்டணி அமைத்துள்ளதால், கட்சியை இணைக்க முடியாது என்று கூறியிருந்தேன். ஆனால், தில்லியில் 3 முறை என்னை சந்தித்த நிதிஷ்கு மாா், ஐக்கிய ஜனதா தளத்துடன் மஜதவை இணைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை என்றாா்.