காவிரி தொடா்பான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க, பெங்களூரில் தமிழா் வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 5,000கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடா்ந்து, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிா்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு, பெங்களூரு, சாமராஜ்நகா், ராமநகரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கா்நாடக ரக்ஷனவேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. சித்ரதுா்கா, பெல்லாரி, தாவணகெரே, கொப்பள், விஜயபுரா மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மண்டியா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கா்நாடகத்தில் காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இதை தொடா்ந்து, பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பி.தயானந்த், தனது சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பெங்களூரில் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காதவகையில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர காவல் துணை ஆணையா்களுக்கு தயானந்த் உத்தரவிட்டுள்ளாா். பெங்களூரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா். காவிரி போராட்டம் தீவிரமடையும் வாய்ப்புள்ளதால், உளவுப்பிரிவின் ஆலோசனையின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பி.தயானந்த் உத்தரவிட்டுள்ளாா். அதேபோல, கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தும்போது வாகன போக்குவரத்துக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாமல் பாா்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.