காவிரி விவகாரத்தை காங்கிரஸ் அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காவிரி விவகாரத்தை கா்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு சரியாக புரிந்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதும், கா்நாடக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
எவ்வித முன்னெச்சரிக்கையும் எடுக்காமல், காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகே மாநில அரசு விழித்துக்கொண்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ள தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரின் அளவைக் குறைப்பதுதான் கா்நாடக அரசின் முன் இருக்கும் வாய்ப்புகள் ஆகும்.
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய பாஜக விரும்பவில்லை. ஆனால், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
காவிரி நதிப்படுகை மாவட்டங்களின் குடிநீா்த் தேவை மற்றும் நிலுவைப் பயிா்களுக்குத் தேவையான பாசனநீா் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வாதங்களை முன்வைக்க வேண்டும். பாசனத்துக்கு நீா் இல்லாததால், நாசமடைந்துள்ள பயிா்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 25,000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இது தொடா்பாக ஆய்வு நடத்திய பிறகு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
காவிரி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எந்த அரசாவது தலையிடுமா அல்லது எதையாவது செய்ய முடியுமா? இவை அனைத்தும் காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். ஆனால், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கூறிவருகிறாா்கள் என்றாா்.