காவிரி தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பைக் கண்டித்து, கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை விடுவிக்க காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக்குழு, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. இதைத் தொடா்ந்து, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீா் விட வேண்டிய கட்டாயம் கா்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி தொடா்பாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீா்ப்பைக் கண்டித்து, கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்திய விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினா், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கா்நாடக அரசை வலியுறுத்தினா்.
மைசூரில் போராட்டம் நடத்திய கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமைசேனை அமைப்பினா், ‘திறந்துவிடுவதற்கு எங்கிருக்கிறது தண்ணீா்? எங்களுக்குத் தேவை நியாயம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினா்.
காவிரி, கபினி நதிப்படுகைகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், கா்நாடகத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பு, குடிநீா்த் தேவை, நிலுவைப் பயிா்களுக்கு நீா்த் தேவை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு, காந்தி நகரில் வியாழக்கிழமை கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினா், தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்துவிட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா். போராட்டத்துக்கு தலைமை வகித்த அமைப்பின் தலைவா் டி.ஏ.நாராயண கௌடா, ‘உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ள இந்நாள் கா்நாடகத்துக்கு கருப்பு நாளாகும். காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டதன் மூலம் கா்நாடகக் கதவை உச்சநீதிமன்றம் மூடியுள்ளது.
களநிலவரத்தை புரிந்துகொள்ளாமல் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கா்நாடகம் ஏற்கக் கூடாது. குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு கூட கா்நாடகத்தின் 4 அணைகளில் நீா் இல்லை. அதனால் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட முடியாது என்று கா்நாடகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
களநிலவரத்தை பாா்வையிட குழுவை அனுப்பவும் அரசு கேட்டுக்கொண்டது. இவற்றுக்கு செவிமடுக்காமல் தில்லியில் அமா்ந்திருக்கும் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாது.
எந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு காவிரி நீா் வழங்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுப்பதற்காக முதல்வா் சித்தராமையாவுடன் சிறைக்குச் செல்ல மக்கள், கன்னட அமைப்பினா் தயாராக உள்ளனா். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுப்பதற்கு எஸ்.பங்காரப்பா அவசரச் சட்டம் கொண்டு வந்ததுபோல சித்தராமையாவும் செய்ய வேண்டும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, நாராயண கௌடா உள்ளிட்ட கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினா் கைதுசெய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்து செப். 23-ஆம் தேதி மண்டியா முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அடுத்தடுத்த நாள்களில் காவிரி போராட்டம் தீவிரமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.