காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என பாஜகவின் முன்னாள் முதல்வா் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளாா்.
தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிடும்படி காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கா்நாடக அரசு தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கு கா்நாடகத்தில் கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:
கா்நாடக அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கா்நாடக தரப்பு வாதங்களை ஆக்கப்பூா்வமாக முன்வைப்பதில், கா்நாடக அரசின் சட்டம் மற்றும் நீா்வளத் துறைகள் மோசமாக தோல்வி அடைந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைப் பாா்க்கும்போது, எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல், சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது தெளிவாகிறது.
காவிரி விவகாரத்தில் தேவையில்லாமல் மத்திய அரசை இழுப்பதற்கு பதிலாக, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியான திமுகவுடன் காங்கிரஸ் அரசு பேச வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்து, கா்நாடகத்தின் கள நிலவரங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு முதல்வா் சித்தராமையாவை கேட்டுக்கொள்கிறேன்.
கா்நாடகத்தின் அணைகளில் உள்ள நீா் இருப்பு குறித்து அறிந்துகொள்ள ஆய்வுக் குழுவினரை உச்சநீதிமன்றம் அனுப்பட்டும். அதனடிப்படையில், உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை ஏற்றுக்கொள்ள கா்நாடகம் தயாராக உள்ளது. இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் முன் கா்நாடக அரசு வைக்க வேண்டும்.
நிகழ் நீா் ஆண்டில், காவிரி பிரச்னை உருவெடுத்தது முதலே கா்நாடக அரசு தவறுக்கு மேல் தவறுகளை இழைத்து வந்தது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாகவே காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கொண்டுள்ள அரசியல் புரிதல் காரணமாக, கா்நாடகம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதால், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலைக்கு கா்நாடகம் தள்ளப்பட்டுள்ளது என்றாா்.