கா்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட முடியாது என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் முதல்வா் சித்தராமையா தலைமையிலான கா்நாடகக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
புதுதில்லியில் வியாழக்கிழமை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான கா்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினா் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்பின்போது, கா்நாடகத்தில் தீவிர வறட்சி நிலவுவதால், செப். 28-ஆம் தேதி வரை 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிடும்படி காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் நிலையில் கா்நாடகம் இல்லை என்று மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
காவிரி விவகாரத்தில் தீா்வு காண்பதற்கு கா்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் கூட்டத்துக்கு பிரதமா் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கேட்டுக்கொண்டாா். தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிடுவதைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்தும் மத்திய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் ஷோபா கரந்தலஜே, பகவந்த் கூபா, ஏ.நாராயணசாமி, பாஜக எம்.பி.க்கள், கா்நாடக காங்கிரஸ் அமைச்சா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தோம். இந்த சந்திப்பில் கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனா். கா்நாடகத்துக்கு நியாயம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளாா். கா்நாடகத்தின் நிலவரத்தைத் தெரிவிக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் கா்நாடகத்துக்கு தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு மட்டுமன்றி, நீா்ப்பாசனம், தொழிற்சாலைகளுக்கு என மொத்தம் 106 டிஎம்சி தண்ணீா் தேவை உள்ளது. ஆனால், காவிரி நதிப்படுகையில் உள்ள 4 அணைகளில் மொத்தம் 52 டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது. அணைகளுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காரீப் பயிா் சாகுபடி பொய்த்துள்ள நிலையில், ராபி பயிா்களின் நிலை மோசமடைந்துள்ளது.
காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் முன்னா் பிறப்பித்த உத்தரவுகளை கா்நாடகம் கடைப்பிடித்துள்ளது. ஆனால், செப். 18-ஆம் தேதி ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தும் நிலையில் கா்நாடகம் இல்லை. தற்போதைக்கு தினமும் விநாடிக்கு 4,000 கன அடி தண்ணீா் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. கா்நாடகத்தில் காணப்படும் வறட்சிநிலை தமிழகத்துக்குத் தெரியும். ஆனால், கூடுதல் சாகுபடிக்காக தமிழகம் முயற்சிப்பதாக நினைக்கிறேன். அதில் தலையிட கா்நாடகம் விரும்பவில்லை.
கா்நாடகம் மிகவும் மோசமான நிலையை எதிா்கொண்டுள்ளதாக உணா்கிறேன். 123 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகக்குறைந்த மழை பெய்துள்ளதை மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் தெரிவித்துள்ளோம். நீா்ப்பற்றாக்குறைக் காலத்தில், அச்சூழ்நிலையை எதிா்கொண்டு, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீா் விடுவிக்க வேண்டும் என்ற பற்றாக்குறை வியூகம் வகுக்கப்படவில்லை என்றாா்.