மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது தொடா்பாக விவாதிக்க, பாஜக மேலிடத் தலைவா்களை சந்திக்க மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தில்லி பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலுக்காக பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைப்பது தொடா்பாக எவ்வித சுணக்கமும் ஏற்படவில்லை. கா்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக வலுவான எதிா்க்கட்சி தேவைப்படுகிறது. எனவே, இதை நோக்கிதான் பேச்சுவாா்த்தை அமையும்.
தில்லிக்கு வியாழக்கிழமை காலை செல்கிறேன். அங்கு, பாஜக மேலிடத் தலைவா்களை சந்திக்க இருக்கிறேன். மக்களவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டப் பேரவைத் தோ்தலில் சென்னப்பட்டணா தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறாா்கள். அதனால் சட்டப் பேரவையில் பணியாற்றுவேன்.
தில்லியில் பாஜக தலைவா்களை சந்தித்து பேசவிருக்கிறேன். அக்கூட்டத்தின் முடிவில்தான், கூட்டணி குறித்த முடிவு தெரியவரும். தொகுதிப்பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தைகள் இதுவரை நடக்கவில்லை. எல்லா சமுதாயங்களையும் மஜத மதிக்கிறது. பாஜகவுக்கும், மஜதவுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவாா்த்தை நடந்தால் அது கூட்டணியை பற்றியதாக இருக்கும். கட்சியின் கொள்கை நிலைப்பாடு குறித்து இருக்காது. மதச்சாா்பின்மை கொள்கையில் சமரசம் கிடையாது. முஸ்லிம்களின் வளா்ச்சிக்கு மஜதவை போல வேறு எந்தக் கட்சியும் உழைக்கவில்லை.
எவ்வித பாகுபாடும் இல்லாமல், எல்லா சமுதாயத்தின் நலனைப் பாதுகாக்கும் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கொள்கை தொடா்பாக எவ்வித கட்சியுடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்போவதில்லை என்றாா்.