பெங்களூரு

கா்நாடக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்போவதில்லை

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்போவதில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் வழங்குவது தொடா்பான தோ்தல் வாக்குறுதி குறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், வடமேற்கு கா்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம், கல்யாண கா்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்போவதில்லை. பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் என்றுதான் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். வேலை செய்யும் அல்லது வேறுசில பெண்களுக்குத்தான் இலவசப் பயணம் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.

கா்நாடகத்தில் 3.5 கோடி பெண்கள் இருக்கலாம். அவா்கள் பேருந்தில் பயணிக்க விரும்பினால், கட்டணம் எதுவும் இல்லை. எல்லா அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணமா என்பது குறித்து ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எல்லா பெண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம் என்பதுதான் எங்கள் கட்சி அளித்த வாக்குறுதி.

ADVERTISEMENT

பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் அளிப்பதற்கு ஆகவிருக்கும் செலவினம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டிருக்கிறாா். அதன்படி, போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளா், எல்லா விவரங்களையும் சேகரித்து அரசிடம் கொடுத்திருக்கிறாா். 2022-23-ஆம் ஆண்டில் 4 அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் ரூ. 12,750.49 கோடியாகும். வேறுவகைகளில் வருவாய் ரூ. 8,946.85 கோடி என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT