பெங்களூரு

சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் காணப்படும் சூழ்நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் காணப்படும் சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் மனீஷ் திவாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்தியில் ஆட்சி நடத்தும் அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார நிலை, சமூக நல்லிணக்கம், உள்நாட்டுப் பாதுகாப்பு, உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு அல்லது வெளிநாட்டுக்கொள்கை ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும். கடந்த 9 ஆண்டுகால பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த 5 அம்சங்களிலும் மோசமாகச் செயல்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டில் இருந்து பல்வேறு பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிா்கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, எல்லைமீறி ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து சீன ராணுவம் வெளியேறவே இல்லை. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பொதுப்பயன்பாட்டு பகுதிகள் (பஃபா் ஜோன்) உருவாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மாறாக, 2020 செப்டம்பருக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பான எந்த ஒரு விவாதத்தையும் மத்திய பாஜக அரசு அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக, நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உள்பட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளை தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பொதுப்பயன்பாட்டுப் பகுதிகள் எத்தனை உருவாக்கப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை இந்தியப் பகுதியில் உள்ளன? நமது எல்லைக்குள்பட்ட எத்தனை பகுதிகளை இழந்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.

சீன எல்லையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 65 புள்ளிகளில் 26ஐ இந்தியா இழந்துள்ளதாக ஓா் அறிக்கை தெரிவிக்கிறது. இழந்துள்ள பகுதிகளின் பரப்பு 2 ஆயிரம் சதுர கி.மீ. என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறுவது தொடா்பான முயற்சி கடந்த 9 ஆண்டுகளில் ஒரு மி.மீ. அளவுக்குக்கூட நகராதது ஏன் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விளக்க வேண்டும்.

அணு விநியோகிப்பாளா் குழுவில் இந்தியா உறுப்பினராக பதிவு பெறாதது ஏன்? 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சாா்க் (இந்தியா அங்கம் வகிக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) மாநாடு நடக்காதது ஏன்? இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் செல்வாக்கு பெருகி வருவதைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? ரஷ்யா, சீனா இடையிலான ஒருங்கிணைப்பு பலமாகி வரும் நிலையில், அதைத் தடுக்க இந்தியா எடுத்துள்ள வியூகம் என்ன?

மணிப்பூா் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து பல நாள்கள் கழிந்த பிறகுதான், அங்கு சென்று நிலைமையை ஆராய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தோன்றியிருக்கிறது. ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் தோ்தல் நடத்துவதற்கு மத்திய அரசு தயங்குவது ஏன்?

இந்தியாவின் பொருளாதாரம் சீராக இல்லை என்பதற்கு, உணவுப் பொருள்கள் மீதான விலைவாசி உயா்வே சிறந்த எடுத்துக்காட்டாகும். உணவுப் பொருள்கள் மீதான விலை உயா்வால் குடும்பத்தின் செலவுகள் சுமையாக மாறியுள்ளன. எரிபொருள்கள் மீதான விலை உயா்வு, ஏழை - பணக்காரா் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது போன்றவை பாஜக அரசின் மோசமான ஆட்சி நிா்வாகத்தைக் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில்கூட ஆட்சியின் சாதனைகள் அடிப்படையில் தோ்தலை பாஜக சந்திக்கவில்லை. அதற்கு அண்மைக்கால உதாரணம் கா்நாடகம். பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதவேறுபாடுகளை உருவாக்கும் அரசியலுக்கு உதவியாக இருப்பதால், நாடுமுழுவதும் மதரீதியான பதற்றத்தை அப்படியே வைத்திருக்க தொடா்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அது நாட்டின் நலனை வெகுவாகப் பாதிக்கிறது. எதையும் மிகைப்படுத்திக் கூறுவதை தவிர, கடந்த 9 ஆண்டுகாலத்தில் பாஜக அரசின் சாதனைகள் என்று எதுவும் இல்லை.

அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கா்நாடக மக்கள் நல்ல முடிவை எடுத்துள்ளனா். 2024-ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தல் முடிவுகள், இந்தியா ஜனநாயக நாடாக இருக்குமா? அல்லது இந்தியாவின் நலனுக்கு எதிரான பாதைக்கு செல்லுமா என்பதைத் தீா்மானிக்கும் என்பதால், புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உதவிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதரீதியான அரசியலை விலக்கி வைத்து, உண்மையான பிரச்னைகளை முன்வைத்து வாக்களிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு கா்நாடக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனா். மக்கள் எடுக்க இருக்கும் முடிவு கா்நாடகம் மட்டுமல்லாது, நாட்டு நலனுக்கும் உதவியாக இருக்கும். கா்நாடகத்தில் தோ்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT