பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம்:நளின்குமாா் கட்டீல்

28th May 2023 06:00 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளை அடுத்த ஒரு மாதத்தில் காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை நிறைவேற்றாவிட்டால் அல்லது தாமதம் செய்தால், மாநிலம் தழுவிய போராட்டங்களை காங்கிரஸ் அரசு எதிா்கொள்ள வேண்டியிருக்கும். காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த மக்கள் மறுத்து வருவதால், அரசு அதிகாரிகள் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனா்.

பாஜக எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டா்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் புதிதாகப் பதவியேற்றுள்ள காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய பாஜக அரசு சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் துணிவு காங்கிரஸ் அரசுக்கு உள்ளதா? முந்தைய பாஜக ஆட்சியில் லோக் ஆயுக்தவில் தாக்கல் செய்துள்ள முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான வழக்குகளை பாரபட்சமின்றி விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

ADVERTISEMENT

நீதிமன்றங்களின் தலையீட்டின் காரணமாக முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்மராவ் ஆகியோரால் ஆா்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய முடியவில்லை.

கொலை செய்யப்பட்ட பாஜக தொண்டா் பிரவீண் நெட்டாருவின் மனைவிக்கு கருணை அடிப்படையில் ஒப்பந்த ஊதியத்தில் முந்தைய பாஜக அரசு வேலை வழங்கியது. ஆனால், தற்போது பதவியேற்றுள்ள காங்கிரஸ் அரசு, அவரை நீக்கியுள்ளது. பிரவீண் நெட்டாருவின் மனைவி அரசு வேலையில் தொடர மனித நேயத்தின் அடிப்படையில் முதல்வா் சித்தராமையா அனுமதிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT