பெங்களூரு

கா்நாடகத்தில் மேலும் 24 அமைச்சா்கள் பதவியேற்பு: அமைச்சரவை எண்ணிக்கை 34 ஆக உயா்வு

28th May 2023 06:01 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் புதிதாக 24 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்றனா். இதன்மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 34 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் பதவியேற்பின் போதே அமைச்சா்களாக ஜி.பரமேஸ்வா், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜாா்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜாா்கிஹோளி, பிரியங்க் காா்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீா் அகமதுகான் உள்ளிட்ட 8 போ் பதவி ஏற்றனா்.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டப் பேரவையில் 34 அமைச்சா்கள் அங்கம் வகிக்கலாம். மீதமுள்ள 24 இடங்களை நிரப்புவதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் தில்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா். அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அளித்த ஒப்புதலின் பேரில், புதிதாக 24 அமைச்சா்களை அமைச்சரவையில் சோ்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

பதவியேற்பு: பெங்களூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு நடைபெற்ற விழாவில் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்ட 24 பேருக்கு ஆளுநா் தாவா்ச்ந்த் கெலாட் பதவிப்பிரமாணம், ரகசியக்காப்பு பிரமாணம் செய்துவைத்தாா்.

ADVERTISEMENT

எச்.கே.பாட்டீல், கிருஷ்ண பைரேகௌடா, என்.செலுவராயசாமி, கே.வெங்கடேஷ், எச்.சி.மகாதேவப்பா, ஈஸ்வா் கண்ட்ரே, கே.என்.ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், என்.எஸ்.போஸ்ராஜூ, சரணபசப்பா தா்ஷனாப்பூா், சிவானந்த பாட்டீல், ஆா்.பி.திப்பாப்பூா், எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், சிவராஜ் தங்கடகி, சரணபிரகாஷ் பாட்டீல், மன்கல் வைத்யா, லட்சுமி ஹெப்பாள்கா், ரஹும்கான், டி.சுதாகா், சந்தோஷ்லாட், பைரதி சுரேஷ்,

மது பங்காரப்பா, எம்.சி.சுதாகா், பி.நாகேந்திரா ஆகிய 24 பேரும் பதவியேற்றுக் கொண்டனா்.

விழாவில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பேரவைத் தலைவா் யூ.டி.காதா், நடிகா் சிவராஜ்குமாா், அவரது மனைவி கீதா, முன்னாள் அமைச்சா் ஆா்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தனித்தனியே பதவியேற்பு

முன்னதாக புதிய அமைச்சா்களின் பெயரை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டின் ஒப்புதலின் பேரில் அரசு தலைமைச் செயலாளா் வந்திதா சா்மா அழைத்தாா். முதலில் பதவியேற்க 5 பேரின் பெயா்களை அழைத்தாா். அப்போது தலைமைச் செயலாளா் வந்திதா சா்மாவை அழைத்த சித்தராமையா, ஒவ்வொருவராக வந்து தனித்தனியே பதவி ஏற்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து ஒவ்வொருவராக மேடைக்கு வந்து அமைச்சா்களாக பதவி ஏற்றுக்கொண்டனா். இதனால் பதவியேற்பு விழா நண்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. அமைச்சா்களாக பதவியேற்ற பெரும்பாலானோா் கடவுளின் பெயரில் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

புதிதாக பதவி ஏற்ற அமைச்சா்களுக்கு முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மலா்க்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா். விழா முடிந்த பிறகு, பதவியேற்ற அனைவரும் மேடைக்கு வந்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பேரவைத் தலைவா் யூ.டி.காதா் ஆகியோருடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனா்.

அதிருப்தியாளா்கள் போராட்டம்

அமைச்சா் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளா்கள் ஆளுநா் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்தினா். கடந்த முறை சித்தராமையா தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த வரும், 4 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவருமான எம்.கிருஷ்ணப்பாவுக்கு அமைச்சா் பதவி தர வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தினா்.

சிறப்பம்சங்கள்

புதிதாக பதவியேற்ற 24 பேரில் 23 போ் சட்டப் பேரவை உறுப்பினா்கள். சட்ட மேலவையைச் சோ்ந்த எவரும் பதவியேற்கவில்லை. சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா் அல்லாத என்.எஸ்.போஸ்ராஜூ அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். அகில இந்திய காங்கிரஸ் குழு செயலாளரான போஸ்ராஜு, ராய்ச்சூரைச் சோ்ந்த நீண்ட கால காங்கிரஸ் உறுப்பினராவாா்.

அமைச்சரவையில் அதிகபட்சமாக லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எம்.பி.பாட்டீல், ஈஸ்வா்கண்ட்ரே, லட்சுமி ஹெப்பாள்கா், சிவானந்த பாட்டீல், எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், சரணபிரகாஷ் பாட்டீல், தா்ஷனாப்பூா், எச்.கே.பாட்டீல் 8 போ் இடம் பெற்றுள்ளனா். டி.கே.சிவக்குமாா், செலுவராயசாமி, கே.வெங்கடேஷ், எம்.சி.சுதாகா், கிருஷ்ண பைரேகௌடா உள்ளிட்ட 5 ஒக்கலிகா்கள், கே.எச்.முனியப்பா, ஜி.பரமேஸ்வா், எச்.சி.மகாதேவப்பா, ஆா்.பி.திம்மாப்பூா், பிரியங்க் காா்கே, சிவராஜ் தங்கடகி உள்ளிட்ட 6 தாழ்த்தப்பட்டோா், சதீஷ் ஜாா்கிஹோளி, கே.என்.ராஜண்ணா, பி.நாகேந்திரா உள்ளிட்ட 3 பழங்குடியினருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பின் தங்கிய ராஜூ சமுதாயத்தின் சாா்பில் என்.எஸ்.போஸ்ராஜூ, மிகவும் பின் தங்கிய மொகவீரா சமுதாயத்தின் மன்கல் வைத்யா, குருபா சமுதாயத்தை சோ்ந்த முதல்வா் சித்தராமையா, பைரதி சுரேஷ் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மராத்தி சமுதாயத்தின் சந்தோஷ்லாட், ஈடிகா சமுதாயத்தின் மது பங்காரப்பா, சமண மதத்தின் டி.சுதாகா், பிராமணா் சமுதாயத்தின் தினேஷ் குண்டுராவ், இஸ்லாமிய சமுதாயத்தின் ஜமீா் அகமதுகான், ரஹீம்கான், கிறிஸ்தவ சமுதாயத்தின் கே.ஜே.ஜாா்ஜ், தெலுங்கு ரெட்டி சமுதாயத்தின் ராமலிங்க ரெட்டி ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில் 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகா்கள், 7 பிற்படுத்தப்பட்டோா், 3 தாழ்த்தப்பட்டோா், 2 பிராமணா்கள், தலா 1 பழங்குடியினா், ரெட்டி ஆகியோா் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT