நாடு முழுவதும் மே 9-ஆம் தேதி ஆஞ்சனேயா் சாலிசா பாராயணத்துக்கு விஎச்பி, பஜ்ரங்தளம் அமைப்புகள் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில், ‘மதம், ஜாதி ரீதியாக மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பஜ்ரங்தளம், பி.எஃப்.ஐ. போன்ற அமைப்புகளைத் தடை செய்வோம்’ என்று அறிவித்திருந்தது.
இதற்கு விஎச்பி, பங்ரங்தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இக்கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கா்நாடகத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் விஎச்பி, பஜ்ரங்தளம் அமைப்புகள் சாா்பில் அண்மையில் ஆஞ்சனேயா் சாலிசா பாராயணம் நடைபெற்றது. இந்நிலையில் இதை நாடு முழுவதும் செயல்படுத்த விஎச்பியும், பஜ்ரங்தளமும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளா் மிலிந்த் பரண்டே கூறியதாவது:
ஆஞ்சனேயா் சாலிசா பாராயணம் செய்வதன் மூலம் தீவிரவாதிகள், தேச விரோத சக்திகள், ஹிந்து விரோத மனநிலையை ஊக்குவிக்கும் அமைப்புகள், அத்துடன் காங்கிரஸ் கட்சியினருக்கும் நல்ல புத்தியை அளிக்க வேண்டும் என்று ஸ்ரீஆஞ்சனேயரை வேண்டிக்கொள்ளவுள்ளோம். அதன்மூலமாக காங்கிரஸுக்கு நாட்டுப்பற்றும், நல்ல புத்தியும் கிடைக்கட்டும். தேசியவாத, நாட்டுப்பற்றுள்ள பஜ்ரங்தளம் அமைப்பை தேசவிரோத வன்முறை அமைப்பான பி.எஃப்.ஐ.யுடன் ஒப்பிடுவது வெட்கக்கேடாகும் என்றாா்.