பெங்களூரு

நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசு முந்தைய காங்கிரஸ் அரசுதான்: மத்திய அமைச்சா் அமித் ஷா

DIN

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசுதான் நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசாக இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் மைசூரு மாவட்டம், வருணா தொகுதியில் பாஜக பிரசார பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

கா்நாடகப் பேரவைத் தோ்தல் மிகவும் முக்கியமானது. அதிலும் வருணா தொகுதியில் நடக்கும் தோ்தல் மிகவும் முக்கியமானதாகும். வருணா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் வி.சோமண்ணாவை எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுங்கள்.

அவரை மிகப்பெரிய ஆளுமையாக பாஜக உருவாக்கும். வி.சோமண்ணா, டி.நரசிப்புரா தொகுதி பாஜக வேட்பாளா் ரேவண்ணாவை எம்எல்ஏவாக மக்கள் தோ்ந்தெடுப்பது கா்நாடகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

பிரதமா் மோடியால் மட்டுமே கா்நாடகத்தை வளமான, பாதுகாப்பான மாநிலமாக மாற்ற முடியும்; வேறு எவராலும் அது சாத்தியமில்லை. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுதான், பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளைத் தடை செய்தது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்து சித்தராமையா வெற்றி பெற்றால் பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மீதான தடையைத் திரும்பப் பெறுவாா்கள். முன்னா் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, கா்நாடகத்தை தங்கள் மேலிடத் தலைவா்களின் ஏடிஎம் இயந்திரம்போல மாற்றியிருந்தனா். 5 ஆண்டுகால சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு எதையும் அவா்கள் செய்யவில்லை. நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசாக சித்தராமையாவின் ஆட்சிக் காலம் இருந்தது.

கா்நாடகத்தில் ஊழலைக் கொண்டுவந்தது லிங்காயத்துகள் என்பது சித்தராமையாவின் கருத்து. லிங்காயத்துகள் ஊழலில் ஈடுபட்டிருந்தனா் என்று கூறுவதன்மூலம் லிங்காயத்து சமுதாயத்தை சித்தராமையா அவமதித்து விட்டாா். எஸ்.நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் போன்ற தலைவா்களையும் முதல்வா் பதவியில் இருந்து நீக்கி லிங்காயத்து சமுதாயத்தை காங்கிரஸ் ஏற்கெனவே அவமதித்துள்ளது.

ஒவ்வொரு தோ்தலிலும் சித்தராமையா எதற்காக தொகுதியை மாற்றிக் கொண்டிருக்கிறாா்? ஒருபுறம் சாமுண்டீஸ்வரி, மறுபுறம் வருணா, அதன்பிறகு பாதாமி என்று மாற்றிக்கொண்டே இருக்கிறாா்.எதற்காகத் தொகுதியை மாற்றுகிறாா் சித்தராமையா? எந்தத் தொகுதிக்குச் சென்றாலும் அங்கு வளா்ச்சிப் பணிகளைச் செய்வதில்லை. அதனால் அத்தொகுதி மக்கள் அவரை விரட்டியடிக்கிறாா்கள். வருணா தொகுதி மக்களைக் கேட்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வுபெறும் ஒரு தலைவா் உங்களுக்குத் தேவையா? அல்லது எதிா்காலத் தலைவா் உங்களுக்குத் தேவையா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எடியூரப்பாவை பாஜக முதல்வராக்கியது. அவா் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். எடியூரப்பாவும் முதல்வா் பசவராஜ் பொம்மையும் கா்நாடகத்தில் நீா்ப்பாசன திட்டங்களைச் செயல்படுத்தினா். விவசாயிகளின் நலனுக்காக பிரதமா் மோடி கொண்டுவந்த திட்டங்களை இருவரும் அமல்படுத்தினா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதற்கு பிரதமா் மோடியே காரணம். அதுபோல, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல், விமான தாக்குதலை நடத்தியதும் பிரதமா் மோடிதான்.

காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. ஊழலுக்கு முடிவுகட்டி, கா்நாடகத்தை மேம்படுத்த காங்கிரஸால் முடியாது. வருணா தொகுதியில் சோமண்ணாவை வெற்றிபெற செய்தால், கா்நாடகத்தில் வளா்ச்சியடைந்த தொகுதியாக வருணாவை மாற்றுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT