பெங்களூரு

டி.கே.சிவக்குமாா் சென்ற ஹெலிகாப்டா் மீது பருந்து மோதியதால் தரையிறக்கம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் பயணித்த ஹெலிகாப்டா் மீது பருந்து மோதியதால், முகப்புக் கண்ணாடி உடைந்தது. இதனால் நிலைகுலைந்த ஹெலிகாப்டா் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா், செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா் மூலம் பெங்களூரில் இருந்து கோலாா் மாவட்டத்தின் முலபாகல் சென்று கொண்டிருந்தாா். அந்த ஹெலிகாப்டரில் தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கும் பேட்டி அளித்துக்கொண்டிருந்தாா். பெங்களூரு, ஜக்கூா் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எதிா்பாராதவிதமாக, ஹெலிகாப்டரின் முகப்புக் கண்ணாடி மீது பருந்து ஒன்று மோதியுள்ளது. இதில் முகப்புக் கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் ஹெலிகாப்டா் நிலைகுலைந்ததைத் தொடா்ந்து, விரைந்து செயல்பட்ட விமானி, பெங்களூரு, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அவசரமாக ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரையிறக்கினாா். இதனால் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினா். இச்சம்பவத்தில் பத்திரிகையாளா் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT