சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கிழக்கு வட்டத்தின் வட்டாட்சியா் எஸ்.அஜித்குமாா் ராயை கா்நாடக மாநில லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.
வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்துள்ளதாக வந்த தகவலின்பேரில் பெங்களூரு கிழக்கு வட்டத்தின் வட்டாட்சியா் எஸ்.அஜித்குமாா் ராய்க்குச் சொந்தமான 11 இடங்களில் லோக் ஆயுக்த போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்த லோக் ஆயுக்த போலீஸாா், வட்டாட்சியா் அஜித்குமாா் ராயை வியாழக்கிழமை கைதுசெய்தனா். இந்த வழக்கில் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதால், கைது செய்துள்ளதாக, லோக் ஆயுக்த ஐ.ஜி. ஏ.சுப்ரமணியேஸ்வா் ராவ் தெரிவித்தாா்.
வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்துள்ளதாகக் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்பேரில், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இது தொடா்பாக வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன.
அப்போது, அஜித்குமாா் ராய்க்குச் சொந்தமான 11 இடங்களில் சோதனை நடத்தியபோது, ரூ. 40 லட்சம் ரொக்கம் உள்பட ரூ. 1.90 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர, ஏராளமான சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவை அஜித்குமாா் ராயின் பினாமி சொத்துக்களாக இருக்கும் என்று சந்தேகம் உள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று லோக் ஆயுக்த போலீஸாா் தெரிவித்துள்ளனா்.