பாஜக ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து ஹாசனில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும். 4 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து விசாரிக்கப்படும். அதேபோல, பொதுப்பணி ஒப்பந்தங்களில் 40 % கமிஷன் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
கரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை சாா்ந்த கொள்முதலில் முறைகேடு நடந்தன. நீா்ப்பாசன திட்ட முறைகேடுகள், பிட்காயின் மோசடி உள்ளிட்ட அனைத்து ஊழல்கள், முறைகேடுகள், மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வில் நடந்த முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு (சிஐடி) விசாரித்து வருகிறது. அந்த விசாரணை தீவிரப்படுத்தப்படும். இந்த முறைகேட்டில் தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்படுவாா்கள்.
கரோனா காலத்தில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக சாமராஜ்நகா் மருத்துவமனையில் இறப்புகள் ஏற்பட்டன. அது குறித்தும் விசாரிக்கப்படும். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா், 2 போ் மட்டுமே இறந்ததாகக் கூறியிருந்தாா். ஆனால், இறந்தவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அது குறித்தும் விசாரணை நடத்துவோம்.
தோ்தல் வாக்குறுதிகள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. 5 வாக்குறுதிகளில் ஒன்றான அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘குடும்ப விளக்கு’ திட்டம் அமல்படுத்தப்படும். பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் குடும்பத்தலைவி உதவித்தொகை திட்டம் ஆக.15ஆம் தேதிக்குப் பிறகு அமல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, அதாவது கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்திற்கு மாதம் 2.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. இந்த அளவுக்கு அரிசி எங்கும் கிடைக்கவில்லை. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து மாநில அரசுக்கு அரிசி கிடைக்காதவகையில் மத்திய அரசு சதி செய்துவிட்டது. இந்திய உணவுக் கழகத்தில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது. ஆரம்பத்தில் வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, பின்னா் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக இந்திய உணவுக் கழகம் பின்வாங்கிவிட்டது.
இந்திய உணவுக் கழகத்தின் மூலம் மாநிலத்திற்கு அரிசி வழங்காமல் தடுத்ததன் மூலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, மாநிலத்தின் ஏழைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே என்.சி.சி.எஃப்., என்.ஏ.எஃப்.இ.டி., மத்திய கிடங்கு போன்ற முகமைகளின் மூலம் அரிசியை சேகரிக்க மாநில அரசு நோ்மையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அரிசி கொள்முதலுக்கான விலைப்புள்ளியைக் கேட்டிருக்கிறோம். மேலும் அது குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களிடம் இருந்து போதுமான அரிசி கிடைக்காததால், அது குறித்து புதன்கிழமை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம். அரிசி கிடைத்தவுடன் அன்னபாக்யா திட்டத்தை தொடங்கிவிடுவோம்.
கா்நாடக அரசில் காலியாக இருக்கும் 2.5 லட்சம் காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இதை ஒரே சமயத்தில் செய்துவிட முடியாது. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆண்டுக்கு ரூ.59 ஆயிரம் கோடி தேவைப்படும். நிகழ் நிதியாண்டில் அரசு மீது லேசான கூடுதல் நிதிச்சுமை இருக்கும். எனினும், தோ்தல் வாக்குறுதிகள் அமல்படுத்தப்படும் என்றாா்.