பெங்களூருக்கு வெளியே 5 உயா்தர துணை நகரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கா்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூருக்கு வெளியே உலகத்தரத்தில் தலா 2 ஆயிரம் ஏக்கரில் 5 துணை நகரங்கள் அமைக்கப்படும். தனியாா் நிறுவனங்களை போல நகரின் 4 திசைகளிலும் மாளிகை வீடுகள் (வில்லா) கொண்ட சொகுசுக் குடியிருப்பு வளாகங்களையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கான நிலங்களை அடையாளம் காணுமாறு உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு துணைநகரத்திலும் தலா 30 ஆயிரம் மனைகள் அமைக்கவும், 5 ஆயிரம் வீடுகள் கட்டவும் வாய்ப்புள்ளது. உலகத்தரத்திலான 5 துணை நகரங்களிலும் மொத்தம் 1.5 லட்சம் மனைகள், 25 ஆயிரம் வீடுகள் இருக்கும். இயற்கைச்சூழ்ந்த இடத்தில் மாளிகை வீடுகள் (வில்லா) திட்டம் அமைக்கப்படும். இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 500 ஏக்கா் நிலத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளேன்.
ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டங்களை வகுக்கும் போது லாபநோக்கத்தை கைவிட வேண்டும் என்று வீட்டுவசதி வாரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதேநேரம், அந்த வீடுகளின் தரத்தில் எவ்வித சமரசமும் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
பெங்களூரில் பெருகிவரும் கட்டடங்களின் அடா்த்தி, மக்கள்தொகை அடா்த்தியைக் குறைப்பதற்கு துணைநகரங்கள் அமைக்க வேண்டியது தவிா்க்க முடியாததாகும். மெட்ரோ, சாலை போக்குவரத்து போன்ற வசதிகளைக் கருத்தில் கொண்டு புதிய துணைநகரங்கள் அமைக்கப்படும். பன்னாட்டு நகரமாக பெங்களூரு உயா்ந்திருப்பதால், ஏராளமான தொழில்முனைவோா், முக்கிய பிரமுகா்கள் பலா் பெங்களூரில் நிரந்தரமாக தங்குவதற்காக வருகைதருகிறாா்கள்.
எனவே, பெங்களூரு புறநகா் பகுதியில் சொகுசான மாளிகை வீடுகளை அமைக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட வரைவை கா்நாடக வீட்டுவசதி வாரியம் விரைவில் தயாரிக்கும். தலா 500 ஏக்கா் பரப்பில் 4 மாளிகை வீட்டு வளாகங்கள் அமைக்கப்படும். இதில் 1,000 மாளிகை வீடுகள் கட்டப்படும். நில உரிமையாளா்களுடன் 50:50 அடிப்படையில் மாளிகை வீடுகள் கட்டப்படும். இதன்மூலம் நிலத்திற்கான தொகை குறையும் என்றாா்.