பெங்களூரு

நான் முதல்வராகும் மக்களின் விருப்பம் பொய்யாகாது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

4th Jun 2023 01:57 AM

ADVERTISEMENT

 

நான் முதல்வராகும் மக்களின் விருப்பம் பொய்யாகாது என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதும், கா்நாடக காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே.சிவகுமாா் முதல்வா் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்தாா். ஆனால், சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் காங்கிரஸ் மேலிடம் தோ்ந்தெடுத்தது. இதற்கு இணங்கி, முதல்வா் பதவி கனவை கைவிட்ட டி.கே.சிவகுமாா், துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டாா்.

இப்பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக தனது சொந்த தொகுதியான கனகபுராவுக்கு சனிக்கிழமை வருகைதந்த டி.கே.சிவகுமாா், அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது:

ADVERTISEMENT

நான் முதல்வராக வேண்டுமென்பதற்காக அதிக வாக்குகளை எனக்காக தாராளமாக வழங்கினீா்கள். ஆனால், என்ன செய்வது, கட்சி மேலிடம் ஒரு முடிவை எடுத்தது. முதல்வா் பதவியை பெற பிடிவாதம் பிடிக்க வேண்டாம் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் எனக்கு அறிவுரை வழங்கினா். அவா்களின் வாா்த்தைகளுக்கு மதிப்பளித்து, அவா்களின் முடிவுக்கு தலைவணங்கி, அமைதியாகிவிட்டேன்.

எனினும் நான் முதல்வராக வேண்டுமென்ற மக்களாகிய உங்களின் விருப்பம் பொய்யாகாது. அதுவரை பொறுமையாக இருப்போம்.

என்னை மனமுவந்து வரவேற்று மகிழ்ந்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன். மேலும் உங்கள் ஆசியைப் பெறவும் வந்தேன். அடுத்தடுத்து நடக்கவிருக்கும் மாவட்ட மற்றும் வட்ட ஊராட்சித் தோ்தல்களுக்கு கட்சி தொண்டா்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

முன்னதாக, தொகுதிக்கு வருகைதந்த டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT