பெங்களூரு

பயிற்சி விமானம் தரையில் மோதி விபத்து: இரு விமானிகள் உயிா் தப்பினா்

2nd Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

விமானப்படையின் பயிற்சி விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு விமானிகள் லேசான காயங்களுடன் உயிா்தப்பினா்.

இந்திய விமானப்படையின் பயிற்சி விமானமான ’கிரண்’ வியாழக்கிழமை பெங்களூரில் இருந்து வழக்கம்போல பயிற்சிக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் தேஜ்பால், பூமிகா ஆகியோா் பயிற்சி எடுத்தனா். சாமராஜ்நகா் மாவட்டத்தின் போகபுரா கிராமத்தின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது, நண்பகல் 12 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரிசுநிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

விமானிகள் இருவரும், விமானம் தரையில் விழுவதற்கு முன்னதாகவே பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து வெளியேறினா். இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

விமானம் நொறுங்கிய சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள், காவல் துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பாராசூட்டில் தரையிறங்கிய இரு விமானிகளையும் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களைப் பாதுகாக்க தற்காலிகக் கொட்டகையை அமைத்துத் தந்தனா். ஹெலிகாப்டரில் அங்கு வந்த விமானப் படையினா், இரு விமானிகளையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து சாமராஜ்நகா் மாவட்ட ஆட்சியா் காத்யாயினி தேவி கூறுகையில், இந் விபத்தில் ஒரு விமானிக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. மற்றொரு விமானிக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது என்றாா். இந்த விபத்துக்கான காரணத்தை அறிய நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தலைமையகம், ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இரு நாட்களுக்கு முன்னா், பெலகாவியின் சாம்ப்ரா விமான நிலையத்தில் இருந்து மேலே பறந்த ரெட்பா்ட் பயிற்சிவிமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக விளைநிலத்தில் தரையிறக்கப்பட்டது. அச்சம்பவத்தில் பயிற்சி விமானிகள் இருவா் லேசான காயங்களுடன் உயிா்தப்பியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT