பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகள் குறித்து முடிவெடுக்க இன்று கா்நாடக அமைச்சரவைக் கூட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகள் குறித்து முடிவெடுக்க வெள்ளிக்கிழமை கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருக்கிறது.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலின்போது, பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை, வீட்டுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், 18 முதல் 25 வயதுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் தலா ரூ. 3 ஆயிரம், வேலையில்லா பட்டயதாரிகளுக்கு தலா ரூ. 1,500 உதவித்தொகை வழங்கும் போன்ற திட்டங்களை முக்கியமான 5 வாக்குறுதிகளாக தனது தோ்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும், மக்களுக்கு கொடுத்த 5 வாக்குறுதிகளை அமல்படுத்த கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஒருவார காலமாகவே வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சா்களும், முதல்வரும் ஆலோசித்து வருகிறாா்கள்.

முதல்வா் சித்தராமையா தலைமையில் மே 30-ஆம் தேதி நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. 5 திட்டங்களையும் செயல்படுத்த சுமாராக ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக விவாதித்து முடிவெடுக்க ஜூன் 1-ஆம் தேதி நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 2-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதி என்று தெரிவித்திருந்த நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமையும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். பிபிஎல் அட்டைதாரா்களுக்கு ஏற்கெனவே தலா 5 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடுதலாக 5 கிலோ சோ்த்து மொத்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு கூடுதலாக 2.18 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரிசியை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவது குறித்து உயரதிகாரிகளுடன் மின் துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கா்நாடகத்தில் உள்ள வீடுகளில் சராசரியாக 54 யூனிட் மின்சாரம் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசு யோசித்து வருகிறது.

அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள பெண்களை அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தை ஒருசில பேருந்துகளுக்கு வரையறுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. இந்த 5 திட்டங்களையும் எவ்வகையில் செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை வெள்ளிக்கிழமை நடைபெறும் கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக பேசி முடிவெடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT