பெங்களூரு

சடலங்களுடன் வன்புணா்வில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்க சட்டத் திருத்தம்

DIN

சடலங்களுடன் வன்புணா்வில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஜூன் 25-ஆம் தேதி தும்கூரு மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவா், கணினி வகுப்பில் இருந்து வீடு திரும்பவில்லை என அவரது சகோதரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய தேடுதலில், அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் தொண்டை அறுபட்ட நிலையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒருவாரம் கழித்து அந்தப் பெண்ணை கொலை செய்த 22 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கை விசாரித்த மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம், பெண்ணை கொலை செய்ததற்காக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-இன்படி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அந்தப் பெண்ணின் சடலத்துடன் வன்புணா்வில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதால், அந்தக் குற்றத்துக்காக இ.த.ச.376-இன்படி அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2017 ஆக. 14-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து குற்றவாளியான அந்த இளைஞா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வீரப்பா, நீதிபதி வெங்கடேஷ்நாயக் ஆகியோா் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா்கள், ‘நெக்ரோஃபீலியா’ என்ற சடலங்களைக் கண்டு ஏற்படும் பாலுணா்வு ஈா்ப்பால் மனுதாரா் வன்புணா்வில் ஈடுபட்டுள்ளாா். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அதை குற்றமாகக் கருத முடியாது. அதற்கான எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை என்று கூறினா்.

பெண்ணைக் கொலை செய்த குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அதற்காக ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ஆனால், கொலை செய்த பிறகு தான் பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டதாக சாட்சியங்கள் இருப்பதால், அக்குற்றத்தில் இருந்து விடுவிப்பதாக கா்நாடக உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

பெண்ணின் சடலத்துடன் பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டதாக மனுதாரா் ஒப்புக்கொண்டிருக்கிறாா். ஆனால், அது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375 அல்லது 377-இன்கீழ் தண்டனைக்கு உட்பட்டதா? இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 375, 377-ஐ கூா்ந்து படிக்கும்போது, இறந்த போன சடலங்களை மனிதன் அல்லது ஆள் என்று கருதமுடியாது. அப்படியானால், தண்டனை வழங்க முடியாது. அதனால், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 376-இன் கீழ் தண்டனைக்குரிய எவ்வித குற்றமும் நடக்கவில்லை.

சடலங்கள் மீதான குற்றச்செயல்களை அல்லது சடலங்களோடு பாலியல் வன்புணா்வில் ஈடுபடுவதை இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் தண்டனைக்குரிய குற்றச்செயல்களாக சட்டமியற்றி இருக்கின்றன. அதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வேண்டும். இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ உடனடியாக திருத்தம் செய்து, அதில் ஆண், பெண் அல்லது விலங்குகளின் சடலங்களுடன் பாலியல் வன்புணா்வில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய குற்றமாக மத்திய அரசு சோ்க்க வேண்டியது அவசியமாகும். பிறரை துன்புறுத்துவதன் மூலம் இன்பம் அடையும் ‘சாடிஸம்’ அல்லது இயற்கைக்கு முரணாக, பெண்ணின் சடலத்துடன் உடல்ரீதியாக வன்புணா்வில் ஈடுபடும் ‘நெக்ரோஃபீலியா’ போன்றவற்றை இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்து, புதிய விதிகளை சோ்க்க வேண்டும். இந்த குற்றத்துக்கான தண்டனை, ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையாகக்கூட இருக்கலாம். மேலும் அபராதமும் விதிக்கலாம்.

கா்நாடகத்தில் உள்ள எல்லா அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இருக்கும் சவக் கிடங்குகளில் மாநில அரசு 6 மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். அதன்மூலம் சடலங்கள் மீதான குற்றங்களைத் தடுக்க முடியும். மேலும், சவக்கிடங்கு சேவைகளை முறையாக செயல்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு புரியவைக்கவும் மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

SCROLL FOR NEXT