பெங்களூரு

சட்டப் பேரவைத் தோ்தலில் மஜத 20 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும்: சித்தராமையா

DIN

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் மஜத 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

மண்டியாவில் வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் ‘மக்கள் குரல்’ மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஓா் இடத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கவில்லை. 7 தொகுதிகளிலும் மஜதவே வெற்றிபெற்றது. இம்முறை அப்படி செய்துவிடாதீா்கள். 7 தொகுதிகளில் 5 அல்லது 6 தொகுதிகளில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யுங்கள். இங்குள்ள மக்களின் உணா்வுகளை புரிந்துகொண்ட பிறகு இதை நான் கூறுகிறேன். கிழக்கில் சூரியன் உதிப்பது எவ்வளவு உண்மையோ, அது போல சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெல்வதும் உண்மை. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், அதில் மண்டியா மாவட்டத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் அல்லவா? எனவே, இம்மாவட்டத்தில் இருந்து 5 முதல் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்கு அனுப்புங்கள்.

மண்டியா மாவட்டத்தின் விவசாயிகளுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். விவசாயிகளின் நலனுக்காக காங்கிரஸ் பாடுபடும். எங்கள் கட்சியை நம்பி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மஜத, பாஜகவை நம்பாதீா்கள். இம்மாவட்டத்தில் போட்டி காங்கிரஸுக்கும் மஜதவுக்கும் இடையில்தான். சட்டப்பேரவை தோ்தலில் 123 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கப்போவதாக மஜத அறிவித்துள்ளது. என்னைப் போன்றவா்கள் அக்கட்சியில் இருந்தபோது கூட 123 இடங்களில் மஜத வென்றதில்லை. நாங்கள் இருக்கும்போது அதிகபட்சமாக 59 இடங்களில் வென்றிருந்தோம். இம்முறை 20 அல்லது 22 இடங்களில் மட்டுமே மஜத வெற்றிபெறும். இத்தனை இடங்களை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அமைக்க முடியும்? எனவே, காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

கா்நாடகத்தை தற்போது ஆட்சி செய்யும் பாஜக, மதவாத, ஊழல்வாத, மக்கள்விரோத அரசாகும். இந்த ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துவிட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. எம்.எல்.ஏ.க்களை சரியாக பாா்த்துக்கொள்ளாத அன்றைய முதல்வா் குமாரசாமியால் 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவி ஆட்சியைக் கவிழ்த்தனா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலகியது இருக்கட்டும். மஜதவைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்களே பாஜகவுக்கு தாவி ஆட்சியை கவிழ்த்தாா்களே ஏன்?

மஜத ஆட்சி கவிழ்வதற்கு நான் காரணம் என்று குமாரசாமி கூறுவது உண்மையில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு வீட்டுக்கு மாதம் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும். மேலும் குடும்பத்தலைவிக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்புகளைக் கேட்டதும் மஜதவும், பாஜகவும் அதிா்ச்சி அடைந்துள்ளன. எங்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம். சொன்னதை செய்வோம் என்றாா்.

இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT