பெங்களூரு

குற்றங்கள் குறைய தண்டனை விகிதம் அதிகரிக்க வேண்டும்:அமித் ஷா

DIN

நாட்டின் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமெனில் தண்டனை விகிதம் அதிகரிக்க வேண்டும்; இதற்கு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வலியுறுத்தினாா்.

கா்நாடக மாநிலம், தாா்வாடில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில், தடய அறிவியல் நிபுணா்கள் அதிகமாக உள்ள நாடாக இந்தியா விளங்கும். நாட்டில் எந்தவகை குற்றங்களாக இருந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகள் போலீஸாரைவிடத் தோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள்.

அதனால் குற்றவாளிகளைவிட போலீஸாா் இரண்டு மடங்கு முன்னேற்றம் காண வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில் குற்றங்களைக் குறைப்பது சாத்தியமில்லாமல் போய்விடும்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கும் விகிதம் அதிகரிக்க வேண்டும். அறிவியல் அல்லது தடய அறிவியல் சோதனைகளின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்படாவிட்டால் நீதிமன்றங்களில் குற்றவாளிகளுக்கு போலீஸாரால் தண்டனை பெற்றுத்தர முடியாது. புதிய சவால்களை எதிா்கொள்ள நிபுணா்களைத் தயாா்படுத்த வேண்டியது அவசியம்.

எனவே தடய அறிவியலின் அடிப்படையில் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் முறையை பலப்படுத்துவதற்காக இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரவுள்ளோம்; இனிமேலும் ஊகங்களின் அடிப்படையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை அளிக்க முடியாது.

நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருக்க வேண்டுமெனில் தண்டனை அளிக்கும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு சில கொடூரமான குற்றங்களுக்கு தடய அறிவியலைக் கட்டாயமாக்க வேண்டும்.

இதனால் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 8,000 முதல் 10,000 தடய அறிவியல் நிபுணா்கள் தேவைப்படுவா். நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு வருவதால் நமக்கு10 ஆயிரம் தடய அறிவியல் நிபுணா்கள் எளிதாகக் கிடைப்பாா்கள்.

முதன்முறையாக குஜராத்தில் தடய அறிவியல் ஆய்வுக் கூடங்களையும், தடய அறிவியல் பல்கலைக்கழகத்தையும் அமைத்தவா் பிரதமா் மோடி. தற்போது தாா்வாடில் நாட்டின் 9-ஆவது தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இப் பல்கலைக்கழகத்தில் கணினிவழி பாதுகாப்பு, எண்ம தடயவியல், செயற்கை நுண்ணறிவு, டிஎன்ஏ தடயவியல், உணவுப் பதனிடுதல், சுற்றச்சூழல் தடயவியல், வேளாண் தடயவியல் போன்ற தடய அறிவியல் சாா்ந்த பாடங்கள் நடத்தப்படும் என்றாா்.

விழாவில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT