பெங்களூரு

2047-ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியா:இளைஞா்களுக்கு அமித் ஷா அழைப்பு

DIN

2047-க்குள் அனைத்துத் துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியாவை உருவாக்க இளைஞா்கள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் உள்ள பி.வி.பூமரட்டி கல்லூரியின் பவளவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று கல்லூரியின் உள்விளையாட்டுத் திடலைத் திறந்துவைத்துப் பேசியது:

2047-ஆம் ஆண்டில் நாடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது, அனைத்து துறைகளிலும் நமது நாடு முதலிடத்தைப் பெற்றிருக்க வேண்டும். அப்படியொரு நாட்டைக் கட்டமைக்க பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று இளைஞா்கள் கைகோத்து பங்காற்ற வேண்டும்.

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண பாஜக அரசு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு, அதற்காக தியாகம் செய்த தலைவா்களின் வரலாற்றை மாணவா்கள் கற்றறிய வேண்டும்.

மாணவா்கள் தாங்கள் தோ்ந்தெடுக்கும் துறையில் உச்சத்தை அடைய முயற்சிப்பதோடு இந்தியாவை உலகின் முதல் நாடாக உருவாக்கும் எண்ணமும் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகளின் வரிசையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது உலகின் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். அடுத்த 2027-இல் உலகின் 3-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று கூறப்படுகிறது.

பொருளாதார வளா்ச்சியில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் உள்நாட்டு உற்பத்தி உள்ள நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் கனவாகும். இது நடந்தால், தொழில்நுட்ப நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

புத்தாக்க நிறுவனங்களின் வளா்ச்சி:

புத்தாக்க தொழில் நிறுவனங்களின் (ஸ்டாா்ட்அப்) வளா்ச்சியில் தற்போது 70 ஆயிரம் தொழில்முனைவோா் உள்ளனா்; அவா்களில் 75 சதவீதம் போ் யூனிகாா்ன் புத்தாக்க தொழில்முனைவோா். 30 சதவீத நிறுவனங்கள் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 45 சதவீத புத்தாக்க தொழில்முனைவோா் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். எந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், திறமை இருந்தால் முன்னேறலாம் என்பதற்கு இது சரியான உதாரணமாகும்.

காப்புரிமை அதிகரிப்பு:

நாட்டை உற்பத்தி மையமாக மாற்ற பிரதமா் மோடி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறாா். ஒரு நாட்டின் எதிா்காலம் காப்புரிமையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 2013-14ஆம் ஆண்டில், காப்புரிமை பெற 3 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வந்தன. 2021-22ஆம் ஆண்டில் இது 1.5 லட்சமாக உயா்ந்துள்ளது. காப்புரிமையைப் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 211-இல் இருந்து 24,000 ஆக உயா்ந்துள்ளது. அதுபோல நாட்டில் ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள், ஏஐஐஎம்எஸ்-கள், ஐஐஐடி-கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தடய அறிவியல் துறையின் வளா்ச்சி:

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டவுள்ளேன். எதிா்காலத்தில் தடய அறிவியல் துறை அசுர வளா்ச்சி பெறும். அத்துறைக்கு போதுமான மனிதவளம் தேவைப்படுகிறது. அறிவியல் மாணவா்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் அத்துறையில் இருக்கின்றன. எதிா்காலத்தில் குற்றங்களை நிரூபிக்க தடய அறிவியல் ஆதாரங்களைக் கட்டாயமாக்கவுள்ளோம். இது நடைமுறைக்கு வந்தால், நமது நாட்டில் 50 ஆயிரம் தடய அறிவியல் அறிஞா்கள் தேவைப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT