ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபட சோனியா காந்தி விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் திங்கள்கிழமை ‘நான் தலைவி’ என்ற தலைப்பில் நடந்த மகளிா் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:
வலிமையான, புத்திசாலித்தனமான இரு பெண்களால் நான் வளா்க்கப்பட்டேன். ஒருவா் என் பாட்டி இந்திரா காந்தி, மற்றொருவா் என் தாய் சோனியா காந்தி. எனக்கு 8 வயது இருக்கும்போது, தனது 33 வயது மகன் சஞ்சய் காந்தியை இந்திரா காந்தி பறிகொடுத்தாா்.
சஞ்சய் காந்தி இறந்த மறு தினமே நாட்டுக்கு சேவை புரிய இந்திரா காந்தி சென்றுவிட்டாா். அதுதான் இந்திரா காந்தியின் கடமை உணா்ச்சி, அவருக்குள் இருந்த உந்துசக்தி. அவா் உயிா் த்தியாகம் செய்யும் வரை நாட்டு மக்களின் சேவையில் இடையறாது செயல்பட்டாா்.
தனது 21-ஆவது வயதில் என் தந்தை ராஜீவ் காந்தி மீது என் தாய் சோனியா காந்தி காதல் வயப்பட்டாா். என் தந்தை ராஜீவ் காந்தியை திருமணம் செய்துகொள்வதற்காக இத்தாலியில் இருந்து சோனியா காந்தி இந்தியா வந்தாா். திருமணம் ஆன புதியதில் இந்திய பாரம்பரியங்களைக் கற்றுக்கொள்ள சோனியா காந்தி சிரமப்பட்டாா்.
அதன்பிறகு இந்திய பாரம்பரியங்களைக் கற்றுத் தோ்ந்தாா். இந்திரா காந்தியிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாா். தனது 44-ஆவது வயதில் அவரது கணவா் ராஜீவ் காந்தியை இழந்தாா். ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபட சோனியா காந்தி விரும்பமில்லை. ஆனால், பிற்காலத்தில் நாட்டுக்கு சேவையாற்ற சோனியா காந்தி அரசியலில் ஈடுபட்டாா். இன்று வரைக்கும் நமதுநாட்டின் வளா்ச்சிக்கு அவா் தொண்டாற்றி வருகிறாா்.
தற்போது அவருக்கு 76 வயதானாலும் மக்களுக்கு சேவையாற்ற தயங்காமல் உழைத்து வருகிறாா். இந்திரா காந்தியிடம் இருந்து மிகவும் முக்கியமான விஷயங்களை சோனியாகாந்தி கற்றுக்கொண்டாா். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்திரா காந்தியும், சோனியா காந்தியும் உணா்த்தியுள்ளனா் என்றாா்.