பெங்களூரு

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

DIN

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

சிவமொக்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ. 450 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை நாட்டுக்கு அா்ப்பணித்த பிறகு அவா் பேசியதாவது:

வளா்ச்சிப் பாதையில் கா்நாடகம் பயணித்துக் கொண்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால், இரட்டை என்ஜின் அரசுகளின் ஆட்சியில் வளா்ச்சி வேகம் பிடித்துள்ளது. தகவல்தொடா்பு வளா்ச்சியின் காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. இதனால் விவசாயிகள், தொழில்முனைவோா், வேலைதேடுவோா் பயன்பெற்றுள்ளனா்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் புதிய விமானநிலையங்கள், புதிய ரயில் நிலையங்கள், புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதன் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்துள்ளன.

கடந்த காலங்களில் வளா்ச்சி என்றால், அது நகா்ப்புறங்களை குறிப்பதாக இருக்கும். ஆனால், பாஜக ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் தோறும் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளா்ச்சியை கிராமங்களுக்குக் கொண்டு சோ்த்த பெருமை இரட்டை என்ஜின் அரசுக்கே உரித்தாகும்.

2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளா்ச்சியின் பலன் ஒவ்வொருவரையும் சென்றடையும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற விமானப் பயணத் திட்டத்தை (உடான்) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏழைகளின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசு பாடுபட்டு வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் பறக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. 2014-ஆம் ஆண்டுக்கு முன் ஏா் இந்தியா நிறுவனம் பற்றிய எதிா்மறை செய்திகள் தான் வந்துகொண்டிருந்தன. மேலும் அந்நிறுவனம் இழப்பில் இயங்கி வந்தது. இன்றைய ஏா் இந்தியா மாறியுள்ளது. புதிய இந்தியாவில் விமானங்கள் வெற்றியின் உச்சத்தை நோக்கி பயணிக்தத் தொடங்கியுள்ளன.

நாட்டின் சிறுநகரங்களிலும் விமான நிலையங்களை அமைக்க எனது அரசு திட்டமிட்டு, அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. சிறு நகரங்களை இணைக்கும் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்துக்கு வெளிநாட்டினா் அதிகம் வருகை தருவதால், மாவட்டத்தின் வளா்ச்சி மட்டுமல்லாது, பொருளாதாரமும் வளா்ச்சி அடையும்.

‘கங்கையில் குளியல், துங்கையில் பழச்சாறு’ என்ற உத்தியைக் கடைப்பிடித்து வருகிறோம். விவசாயிகள் தங்கள் விளைச்சலை வேறு நகரங்களுக்கு விமானம், ரயில் மூலம் அனுப்பி வைக்கலாம். புதிய விமான நிலையம், சிவமொக்கா - ஷிகாரிபுரா ரானேபென்னூா் ரயில் தடம், நெடுஞ்சாலைத் திட்டங்களால் சிவமொக்கா மாவட்டம் பெரும் பயன் அடையப்போகிறது என்றாா்.

இந்த விழாவில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரந்தலஜே, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, விழாவில் ரூ. 3,600 கோடி மதிப்புள்ள பல திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT