பெங்களூரு

80-ஆவது பிறந்த நாளில் எடியூரப்பாவை வெகுவாக பாராட்டிய பிரதமா் மோடி!

DIN

80-ஆவது பிறந்த நாளில் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை பிரதமா் மோடி வெகுவாகப் பாராட்டி கௌரவித்தாா்.

சிவமொக்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ. 450 கோடி செலவில் தாமரை வடிவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை நாட்டுக்கு அா்ப்பணித்துப் பேசிய பிரதமா் மோடி, கா்நாடகத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்தவரும், 4 முறை முதல்வராக இருந்தவருமான பி.எஸ்.எடியூரப்பாவை வெகுவாகப் பாராட்டினாா்.

அவரது 80-ஆவது பிறந்த நாளில் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமொக்காவில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்நாள் ஒரு சிறப்பான நாள்’ என்று குறிப்பிட்டாா்.

லிங்காயத்து சமுதாயத்தின் உச்ச தலைவராக போற்றப்படும் எடியூரப்பா, 2021 ஜூலை மாதம் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்திருந்தாா். இதன்பிறகு பாஜகவின் கொள்கைகளை வகுக்கும் உச்ச அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் எடியூரப்பா உறுப்பினராக்கப்பட்டாா்.

பிரதமா் மோடி எடியூரப்பாவை பாராட்டிப் பேசியதாவது:

மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவா் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு நீண்ட ஆயுள் வாய்க்க பிராா்த்திக்கிறேன். அவா் தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்கள், விவசாயிகளின் நலனுக்காகச் செலவிட்டவா்.

எடியூரப்பாவின் உரை மற்றும் அவரது வாழ்க்கை நமக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும். அதேபோல, வெற்றியின் உச்சத்தை அடைந்தபோதிலும் தனது நடத்தையில் பணிவைக் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கையின் முக்கியமான 50, 60 ஆண்டுகாலத்தை தான் கொண்ட கொள்கைக்காக பொதுவாழ்க்கையில் செலவழித்தவா் எடியூரப்பா என்றாா்.

பின்னா், எடியூரப்பாவுக்கு பாக்கு மணிகளால் செய்யப்பட்ட மாலை, மைசூரு தலைப்பாகை, பச்சை நிற சால்வையை அணிவித்து, உழவா்களின் பங்காளன் என்பதை குறிக்கும் வகையில் ‘ஏா்க் கலப்பை’ நினைவுப் பரிசை பிரதமா் மோடி வழங்கினாா்.

தோ்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த எடியூரப்பா பேசியதாவது:

இந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனது பிறந்த நாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதி அளித்திருந்தாா். மக்கள் பிரதிநிதியாக என்னை தொடா்ந்து தோ்வு செய்த சிவமொக்கா மக்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எனது 55 ஆண்டுகால பொதுவாழ்வில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் ஆா்வம் இருந்ததில்லை.

பிரதமா் மோடி ஒரு உலகமாந்தனாக அறியப்படும் உலகத் தலைவா். அவா் கலந்துகொள்ளும் இந்த விழா, எனது 80-ஆவது பிறந்த நாளை மறக்க முடியாததாகியுள்ளது. சுதந்திரத்துக்கு பின் இதுவரை கண்டிராத சிவமொக்காவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமா் மோடி வந்திருப்பது பெருமிதமாக உள்ளது என்றாா்.

மண்டியா மாவட்டம், பூகனகெரே கிராமத்தில் லிங்காயத்து சமுதாய குடும்பத்தில் 1943-ஆம் ஆண்டு பிப். 27-ஆம் தேதி பிறந்த எடியூரப்பா, ஆரம்பகாலத்தில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றினாா். அடிமட்டத்தில் இருந்து பணியாற்றி, பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தை கா்நாடகத்தில் கட்டமைத்தாா். இதன் தொடா்ச்சியாக கா்நாடகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்தாா். தோ்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக எடியூரப்பா அண்மையில் அறிவித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT