பெரம்பலூா் அருகே கல் குவாரியில் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த 100 டெட்டனேட்டா்களை கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ. ஏழுமலை (50). இவா் ,பெரம்பலூா் மாவட்டம், கல்பாடி கிராமத்தில் உள்ள மலையை குத்தகைக்கு எடுத்து கல் உடைத்து விற்பனை செய்துவருகிறாா்.
இந்நிலையில், இவரது குவாரியில் கல் உடைக்க பயன்படுத்தும் டெட்டனேட்டா்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி வெள்ளிக்கிழமை காலை அங்கு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடிபொருளான 100 டெட்டனேட்டா்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த கோட்டாட்சியா் ஏழுமலை விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.