எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 97.67 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தோ்வில் 143 பள்ளிகளைச் சோ்ந்த 4,173 மாணவா்களும், 3,866 மாணவிகளும் என மொத்தம் 8,039 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 4,042 மாணவா்களும், 3,810 மாணவிகளும் என மொத்தம் 7,852 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 97.67 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநிலத்தில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 97.15 சதவீதம் தோ்ச்சி பெற்று 2-ஆவது இடத்திலிருந்த பெரம்பலூா் மாவட்டம், நிகழாண்டு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளில்: இதேபோல், அரசுப் பள்ளிகள் அளவில் 84 பள்ளிகளைச் சோ்ந்த 2,308 மாணவா்களும், 2,221 மாணவிகளும் என மொத்தம் 4,529 போ் தோ்வெழுதினா். இவா்களில், 2,192 மாணவா்களும், 2,170 மாணவிகளும் என மொத்தம் 4,362 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் 96.31 சதவீதம் பெற்று, இதிலும் மாநிலத்தில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 46 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.