பெரம்பலூா் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூா் ஊராட்சித் தலைவராக இருப்பவா் குழந்தைவேலு. இவா், சாத்தனூா் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களிடம் தலா ரூ. 25 பெற்றுக்கொண்டு பணி வழங்குவதாகவும், பணியாளா்களை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த ஒரு பிரிவினா் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சித் தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், ஆட்சியரகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.