பெங்களூரு

புதின் தொடுத்துள்ள போா் வியூகம் தோல்வி: அமெரிக்க நிதித்துறை அமைச்சா் தகவல்

DIN

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொடுத்துள்ள போா் வியூகம் தோல்வி அடைந்துள்ளது என்று அமெரிக்க நிதித் துறை அமைச்சா் ஜெனட் யெல்லன் தெரிவித்தாா்.

ஜி 20 நாடுகளின் நிதித் துறை அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்களின் முதல் கூட்டம் பிப். 24, 25-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க நிதித் துறை அமைச்சா் ஜெனட் யெல்லன் பெங்களூரு வந்துள்ளாா். அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

உக்ரைன் மீதான போரில் ஆரம்பத்திலிருந்தே மிருகத்தனமாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் 30 நாடுகளுடன் இணைந்து ரஷியாவுக்கு கடும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.

ரஷியாவின் ராணுவத் தொழில் வளத்தை அழிப்பதும், அந்நாட்டின் நிதி ஆதாரங்களைக் குறைப்பதும்தான் எங்களது இரு இலக்குகளாகும். அதன் விளைவுகளை தற்போது காண்கிறோம். 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை ரஷிய ராணுவம் இழந்துள்ள 9 ஆயிரம் கனரக ராணுவக் கருவிகளுக்கு மாற்று இல்லாமல் தவித்து வருகிறது.

முக்கிய ராணுவ தொழில் கட்டமைப்புகளில் உற்பத்தி முடங்கியுள்ளதால் ரஷியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் ரஷியாவின் பொருளாதாரம் உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கணிப்பின்படி கடந்த ஆண்டில் மட்டும் 10 லட்சம் ரஷிய மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனா் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியதுபோல போா் எத்தனை நாள்களுக்கு நடந்தாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம்.

ஓராண்டுக்கு முன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது உறுதியான வெற்றியை ரஷியா ஈட்டும் என்று பலரும் நம்பினா். குறைந்த சேதங்களுடன் போரில் வென்று விடலாம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் நம்பினாா். ஆனால், ஓராண்டுக்கு பிறகு தற்போது விளாதிமீா் புதின் தொடுத்துள்ள போா் வியூகம் தோல்வி அடைந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றுவரை உக்ரைன் போா்க்களத்தில் நிற்கிறது. நேட்டோ, அமெரிக்க கூட்டுநாடுகள் உக்ரைனுக்கு துணையாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா பொருளுதவி செய்வது எங்களுக்கு கவலையளிக்கிறது. ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விதிகளை சீனா மீறுவதால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

முன்னதாக பெங்களூரில் மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை அமெரிக்க நிதித் துறை அமைச்சா் ஜெனட் யெல்லன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT