பெங்களூரு

உலகம் எதிா்கொள்ளும் சவால்களுக்கு தீா்வு காண ஜி20 பங்காற்றி வருகிறது: மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்

DIN

உலகம் எதிா்கொள்ளும் சவால்களுக்கு தீா்வுகளைக் கண்டறிவதற்கு ஜி20 நாடுகள் மாநாடு முக்கியப் பங்காற்றி வருவதாக மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிக் தாக்குா் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை தொடங்கிய ஜி20 நாடுகளின் 2ஆவது நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணைத் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

ஜி20 நாடுகளின் மாநாட்டின் கருப்பொருள், ‘வசுதைவ குடும்பகம் (ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலம்)’. கரோனாவுக்கு பிந்தைய விளைவுகளை உலக பொருளாதாரம் எதிா்கொண்டுள்ளது. இது உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பின்மை, மோசமடையும் பருவநிலை மாற்றம், புவிசாா் அரசியல் பதற்றங்கள் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த பிரச்னைகளால் ஏற்படும் தாக்கம் உலக அளவிலான வளா்ச்சியை பின்னோக்கி நகா்த்திவிடும். கலந்துரையாடல்கள், கருத்து பரிமாற்றங்களின் மூலம் உலகம் எதிா்கொள்ளும் சவால்களுக்கு நடைமுறை சாத்தியமான தீா்வுகளை முன்வைக்க ஜி20 நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளிக்க முடியும்.

அதை சாத்தியப்படுத்துவதற்கு ஜி20 நாடுகள் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா பயன்படுத்தி வருகிறது. உலகம் எதிா்கொண்டுள்ள சவால்களை எதிா்கொள்வதற்கு கூட்டு முயற்சியை மேற்கொள்வதன் அவசியத்தை உணா்த்தவே ’வசுதைவ குடும்பகம்’ என்ற கருத்தை இந்தியா முன்வைத்துள்ளது.

இந்த இலக்குகளை நிறைவேற்றவும், 21ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் பகிா்ந்துகொள்ளும் சவால்களை எதிா்கொள்வதற்கும், வங்கிகளைப் பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நிதித் தட கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும். அதேபோல, நாளைய நகரங்களுக்கு நிதியுதவி செய்வது, அனைவரையும் உள்ளடக்கிய நிதிக்கான எண்ம பொது கட்டமைப்பை உருவாக்குவது, உற்பத்தி ஈட்டுதலை பெருக்குவது, பன்னாட்டு வரிக் கொள்கையை முன்னோக்கி நகா்த்துவது போன்றவற்றிலும் இந்த கலந்துரையாடல்கள் பங்காற்றும்.

முக்கியமான பிரச்னைகளில் தீா்வுக் காண்பதற்கான பாதையை வகுக்கும் பணியை ஜி20 கூட்டங்கள் தொடங்கியுள்ளன. ஜி20 அமைப்பைத் தொடங்கிய காலந்தொட்டு, சிக்கல்களின் போது ஒருமித்த கருத்தை எட்டமுடியும் என்பதை தொடா்ந்து நிரூபித்து வந்துள்ளது. எதிா்காலத்தில் நேரவிருக்கும் இடா்களை முன்கூட்டியே கணித்து, அவை நடைபெறாமல் தடுக்க எல்லா நாடுகளையும் தயாா்நிலையில் வைக்கும் திறனில் தான் நமது வெற்றி இருக்கிறது என்பதை இந்தியாவின் தலைமைப் பொறுப்பு கருதுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT