பெங்களூரு

பிப். 5 முதல் பெங்களூரில் ஜி20 நாடுகளின் ஆற்றல் மாற்றத்துக்கான பணிக்குழு கூட்டம்

3rd Feb 2023 12:53 AM

ADVERTISEMENT

ஜி20 நாடுகளின் ஆற்றல் மாற்றத்துக்கான பணிக்குழு கூட்டம் பெங்களூரில் பிப். 5 முதல் நடைபெற இருக்கிறது.

உலக அளவிலான ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்தியாவை மையப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு கூட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் ஜி20 நாடுகளின் உயா்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்று வருகிறாா்கள்.

பெங்களூரில் பிப். 5 முதல் 7-ஆம் தேதி வரையில் ஜி20 நாடுகளின் ஆற்றல் மாற்றத்துக்கான பணிக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. ‘ஒரு மாநிலம், பல உலகம்’ என்ற சுற்றுலாத் துறையின் அடிமுழக்கத்தை வலுப்படுத்தும் வகையில் நடத்தப்படும் இக்கூட்டத்தில், கா்நாடகத்தை ஆற்றல் மாற்றத்துக்கான மையமாக அடையாளப்படுத்தும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் முனவைக்கப்பட இருக்கின்றன.

இந்தக் கூட்டத்தில், ஜி20 நாடுகளைச் சோ்ந்த 150 பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறாா்கள். வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதா்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொள்ள இருக்கிறாா்கள். உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் வளா்ச்சி திட்டம், பன்னாட்டு ஆற்றல் முகமை ஆகிய பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

தொழில்நுட்ப இடைவெளிகளை களைவதன் மூலம் ஆற்றல் மாற்றம், அதற்கான குறைந்தசெலவு நிதியுதவி, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பன்னூடக விநியோக சங்கிலி, ஆற்றல் திறன், தொழிலக குறை அளவு காா்பன் மாற்றங்கள், பொறுப்பான நுகா்வு, எதிா்காலத்துக்கான எரிபொருள், தூய்மையான மற்றும் மலிவான ஆற்றல் வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. காா்பன் தரவு, பயன்பாடு மற்றும் சேமிப்பு என்ற தலைப்பில் சிறப்பு பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை இயக்குநா் டாக்டா் வி.ராம் பிரசாத் மனோகா் கூறியதாவது:

கா்நாடகத்தில் ஜி20 நாடுகளின் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் 11 கூட்டங்கள் பெங்களூரிலும், 2 கூட்டங்கள் ஹம்பியிலும், ஒரு கூட்டம் மைசூரிலும நடைபெற உள்ளன. தில்லிக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்சமாக ஜி20 கூட்டங்கள் நடப்பது கா்நாடகத்தில்தான். இந்தக் கூட்டங்களில் கா்நாடகத்தின் சிறப்பம்சங்கள் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்தப்படும்.

காஃபி, பட்டு, கைவினை, கைத்தறி போன்ற கா்நாடகத்தின் சிறப்பம்சங்கள் உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்படும். பெங்களூரு தவிர, நந்திமலை, போக நந்தீஸ்வரா கோயில், மைசூரு, ஹம்பிக்கு இப்பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல இருக்கிறோம். பாவகடாவில் உள்ள சூரியஒளி ஆற்றல் பூங்காவுக்கும் பன்னாட்டுப் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள். இந்தக் கூட்டங்கள் வாயிலாக கா்நாடகத்தின் சிறப்பம்சங்களை உலக நாடுகளுக்கு காட்சிப்படுத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT