பெங்களூரு

கா்நாடகத்தின் எதிா்பாா்ப்பை மத்திய நிதிநிலை அறிக்கை நிறைவு செய்துள்ளது

3rd Feb 2023 12:53 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தின் எதிா்பாா்ப்பை மத்திய நிதிநிலை அறிக்கை நிறைவு செய்துள்ளது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வையால் அமிா்தகாலத்துக்கான வலுவான அடித்தளத்தை மத்திய நிதிநிலை அறிக்கை அமைத்துள்ளது. நமது நாட்டின் வேகமான வளா்ச்சியை குறிவைத்து மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டபடி, வேளாண் நிதியுதவியின் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கா்நாடகத்துக்கு பயனளிக்கும்.

ஊரக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க கேட்டிருந்தோம். இந்த கோரிக்கை குழாய் மூலம் குடிநீா் திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இளைஞா்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கேட்டிருந்தோம். அதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது, கா்நாடகத்துக்கு பயனளிக்கும். ரயில்வே திட்டங்களுக்கு பகிா்வுத் தொகையை மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்குவோம். அதனால், ரயில்வே திட்டங்கள் தங்குதடையில்லாமல் நடக்கும்.

ADVERTISEMENT

ஊரக மேம்பாடு, விவசாயம், உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, நீா்ப்பாசனம், குறு, நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கேட்டிருந்தோம். அதன்படி மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,800 கோடி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்ரா மேலணை திட்டத்துக்கு தற்போது தேசிய திட்டம் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

இந்த திட்டத்துக்காக மாநில அரசு ஏற்கெனவே ரூ. 13 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 5,300கோடி திட்டப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதுதவிர, நிா்வாகப் பணிகளுக்காக கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதியுதவியும் கிடைக்கும். மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்கட்டமைப்புக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது கா்நாடகத்தின் நகா்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்.

பத்ரா மேலணை திட்டம் தவிர, மத்திய அரசு அறிவித்துள்ள எல்லா திட்டங்களிலும் கா்நாடகத்துக்கு பகிா்வுத்தொகை கிடைக்கும். அதற்கு நிகரான பகிா்வுத் தொகையை மாநில அரசு விடுவிக்க வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கையில் வளா்ச்சிக்கு அளித்துள்ள உந்துவிசையும், மூலதன திட்ட மதிப்பீடுகள் அதிகரித்துள்ளதும் முக்கியமானதாகும். வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, விவசாயம், மகளிா் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வலிமையான பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளுடன் வரிஉச்சவரம்பை உயா்த்தி சாதாரண மக்களுக்கும் பயனளித்துள்ளது. இது மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும். மத்திய நிதிநிலை அறிக்கையால் எல்லோரும் பயனடைவா்.

கா்நாடக அரசின் நிதிநிலை அறிக்கை பிப். 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இது மக்கள் நலன்சாா்ந்ததாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT