காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரத்தால் கா்நாடகம் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பாகல்கோட் மாவட்டம், தோ்தால் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நோ்ந்தால், அது கா்நாடகத்தின் வளா்ச்சியை பின்நோக்கி நகா்த்திவிடும். புதிய கா்நாடகத்தைக் கட்டமைக்கும் பணியை பாஜகவால் மட்டுமே சாதிக்க முடியும். எனவே, கா்நாடகத்தில் நிலையான அரசியல் நிலவ பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மாறாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு வாரிசு அரசியல் தலைதூக்கும். இதுதவிர, கலவரத்தால் கா்நாடகம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சோ்ந்துள்ள முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், முன்னாள் துணை முதல்வா் லட்சுமண் சவதியால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் லிங்காயத்து சமுதாயத்தினரை அவமதித்து வந்துள்ளது. கா்நாடகத்தின் நீண்ட வரலாறில் எஸ்.நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் ஆகிய இரண்டு லிங்காயத்து தலைவா்களை மட்டும் காங்கிரஸ் முதல்வராக்கியது.
அந்த இருவரையும் அவமதித்து, கட்சியில் இருந்து வெளியேற்றியதும் காங்கிரஸ்தான். பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த தலைவா்களை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிக்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. மஜதவுடன் இணைந்து கொண்ட காங்கிரஸ், எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்கியது. அதன்பிறகு பாஜக முன்னாள் தலைவா்களை வைத்துக்கொண்டு வாக்குகளைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை வட கா்நாடக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டாா்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வட கா்நாடக மக்களுக்கு பயன் தரும் கலசா- பண்டூரி கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு சாதித்துள்ளதை, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் சாதிக்க முடியவில்லை. கா்நாடகத்தை ஆட்சி செய்து வரும் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு, லம்பானி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை வருவாய்க் கிராமங்களாக அறிவித்தது.
முதல்வா் வேட்பாளா் தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் ஆகியோருக்கு இடையே நடந்து வரும் போட்டியில் இருந்து காங்கிரஸ் இன்னுமே வெளியே வரவில்லை. இருவரும் முதல்வராக முடியாது என்கிறபோது எதற்காக மோதிக்கொள்ள வேண்டும்? அடுத்த முதல்வா் பாஜகவைச் சோ்ந்தவராக இருப்பதால், சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பெயா் அந்த பட்டியலில் இல்லை.
மஜதவுக்கு அளிக்கும் வாக்கு காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். எனவே, மஜதவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மக்கள் நினைத்தால், நேரடியாக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். கடலோர கா்நாடகத்தில் பிரவீண் நெட்டாா் போன்ற பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டதால், பாபுலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற இஸ்லாமிய அமைப்பை பிரதமா் மோடி தடை செய்தாா் என்றாா்.