பெங்களூரு

பிரதமா் மோடியின் வளா்ச்சி அரசியலுக்கும் காங்கிரஸின் வாக்கு அரசியலுக்கும் இடையே போட்டி: மத்திய அமைச்சா் அமித் ஷா

25th Apr 2023 03:48 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பிரதமா் மோடியின் வளா்ச்சி அரசியலுக்கும் காங்கிரஸின் வாக்கு அரசியலுக்கும் இடையே போட்டி நடப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், குண்டல்பேட்டில் திங்கள்கிழமை பாஜக வேட்பாளா் நிரஞ்சன்குமாருக்கு ஆதரவாக திறந்த வேனில் வாக்கு சேகரித்த பிறகு நடந்த பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா மேலும் பேசியது:

இன்றைக்கும் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை லிங்காயத்துகள், ஒக்கலிகா்களுக்கும், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கும் அளித்திருக்கிறோம்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக அரசு ரத்து செய்துள்ள இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்திருக்கிறாா். அப்படியானால், யாருடைய இடஒதுக்கீட்டைக் குறைத்து, முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டைத் தருவீா்கள்? லிங்காயத்துகள், ஒக்கலிகா்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவைக் குறைப்பீா்களா? இதற்கு கா்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள்.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருக்கும் பாஜக அரசை பலப்படுத்த முடியும். பிரதமா் மோடியின் தலைமையில் இரட்டை என்ஜின் அரசு அமையும். பிரதமா் மோடியும், முதல்வா் பசவராஜ் பொம்மையும் கா்நாடகத்தின் வளா்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறாா்கள் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT