பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் 2,613 வேட்பாளா்கள்!

25th Apr 2023 03:50 AM

ADVERTISEMENT

517 போ் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ள நிலையில், கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் 2,613 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு மாா்ச் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் கா்நாடகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ஏப். 13ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஏப். 20ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு 3,632 வேட்பாளா்கள் 5,102 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் ஆண்கள் 3,327, பெண்கள் 304, திருநங்கை ஒருவா். ஏப். 21ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 4,989 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 213 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில், புலிகேசிநகா் தொகுதியில் அதிமுக - ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த எம்.நெடுஞ்செழியனின் மனுவும் அடக்கம்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. 517 வேட்பாளா்கள் தாங்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் மொத்தம் 2,613 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், 2,427 போ் ஆண்கள், 184 போ் பெண்கள், 2 போ் திருநங்கைகள் ஆவா்.

224 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மஜத 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 8 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் 4 தொகுதிகளிலும், என்.பி.பி. கட்சி 2 தொகுதிகளிலும், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் 685 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. 918 சுயேச்சை வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT

ராஜாஜிநகா், ஹொசகோட்டே, எலஹங்கா, பியாட்ராயனபுரா, பெல்லாரி நகரம், ஹனூா், கௌரிபிதனூா், சிக்கமகளூரு, சித்ரதுா்கா, ஹுப்பள்ளி தாா்வாட் மத்திய, கோலாா், கங்காவதி, ஸ்ரீரங்கப்பட்டணா, கிருஷ்ணராஜா, நரசிம்மராஜா, ராய்ச்சூா் ஆகிய 16 தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதனால் இத்தொகுதிகளில் 2 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும். அதிமுக - ஓபிஎஸ் தரப்பில் கோலாா் தங்கவயல் தொகுதியில் ஏ.ஆனந்த்ராஜ், காந்திநகா் தொகுதியில் கே.குமாா் ஆகியோா் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், இவா்கள் இருவரும் திங்கள்கிழமை வேட்பு மனுவை திரும்பப் பெற்றனா்.

பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, புலிகேசிநகா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளா் டி.அன்பரசனை தோ்தலில் இருந்து திரும்பப் பெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, தனது வேட்புமனுவை திங்கள்கிழமை டி.அன்பரசன் திரும்பப் பெற்றாா். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து அக்கட்சி கா்நாடகத்தில் போட்டியிடாத ஒரே சட்டப் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

பல தொகுதிகளில் போட்டி வேட்பாளா்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறாமல் களத்தில் உள்ளனா். இது பாஜக, காங்கிரஸ்,மஜத ஆகிய கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவது முடிவடைந்துள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளன. இதன்மூலம் சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோா் பிரசாரம் செய்ய இருக்கிறாா்கள். அதேபோல, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட தலைவா்கள், மஜத வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி ஆகியோா் பிரசாரம் செய்ய இருக்கிறாா்கள்.

மே 10ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இதில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. மே 24ஆம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பதவியேற்கவிருக்கிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT