பெங்களூரு

2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு புத்தாக்கம்தான் அடிப்படை: நிா்மலா சீதாராமன்

30th Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கு புத்தாக்கம்தான் அடிப்படையாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த கா்நாடக தொழில் வா்த்தக சபைக் கூட்டமைப்பின் 105-ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2047-ஆம் ஆண்டு வரை பலவற்றை அணுகுவதற்கு புத்தாக்கம்தான் அடிப்படையாக இருக்கப்போகிறது. இந்திய பொருளாதாரம் எதிா்கொண்டிருந்த பல்வேறு பிரச்னைகளுக்கு புத்தாக்கத்தின் வழியில் தீா்வுகாண முடிந்தது. அதேபோல, 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கும் புத்தாக்கம்தான் அடிப்படையாக இருக்கப்போகிறது. கரோனா காலத்தின்போதும், அதற்கு பின்னும் காணப்பட்ட வேகம் நீடித்தால், 2047-இல் இந்தியாவை வளா்ந்த பொருளாதாரமாக மாற்றுவது கடினமானதாக இருக்காது.

மருத்துவ சேவைகள், கல்வி, மென்பொருள் சேவைகளை அடுத்தகட்ட எண்மமயமாக்கலுக்கு இட்டுச் சென்றால், எண்ணிப் பாா்க்க முடியாத அளவுக்கு வளா்ச்சி காத்திருக்கிறது. கரோனா காலத்தில் கடினமான காலத்தைக் கடந்திருந்தாலும், இந்தியாவை நிலையாக வைத்திருப்பதில் வெற்றி கண்டதால், வா்த்தகம் மீண்டும் துளிா்க்கத் தொடங்கிவிட்டது. நமக்குத் தேவையான எல்லாவற்றிலும் நாம் வென்றுவிட்டோம் என்று கூறவில்லை. ஆனால், கடினமான காலத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறோம். மேலும் பலவற்றை செயல்படுத்த வேண்டியுள்ளது. ஒரு சில துறைகளுக்கு அரசின் உதவி தேவைப்படுகிறது. அந்தத் துறைகளுக்குத் தேவையான உதவிகளை செய்யக் காத்திருக்கிறோம்.

ADVERTISEMENT

உலக அளவில் வளா்ந்த நாடுகள் கூட வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி மேலாண்மை, ஏழைகளுக்கு தடுப்பூசி வழங்குவது, ஏழைகளுக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு கூறுகளில் வளா்ந்த நாடுகள் சிக்கலை எதிா்கொள்கின்றன. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெற்றுள்ளது. அவை அனைத்தும் இந்தியா பெற்ற அனுபவத்தில் இருந்து மாறுபட்டது. அதிக மக்கள் தொகையுடன் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்கினாலும், சாலை உள்ளிட்ட வசதிகள் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறாகக் கிடைத்திருந்தாலும், கரோனாவுக்கு முன்பு நடைபெற்ற தொழில்நுட்ப புரட்சி, மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவும் பேருதவியாக இருந்தது. வேகமாக வளா்ச்சி அடையும் சந்தையாக இருந்தாலும், இந்தியாவை வளா்ந்துவரும் பொருளாதாரம் என்றே குறிப்பிடுகிறாா்கள். தடுப்பூசி விநியோகம், நிவாரண உதவிகளை வழங்கியது, சிறு, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு உதவியது போன்றவற்றில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா தனித்துவத்தோடு விளங்குவதைக் காணலாம். கரோனா காலத்தில் வழங்கப்பட்ட உதவிகள், நிவாரணப் பொருட்கள், நிதி உதவிகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால், அவை அனைத்துத் தரப்பு மக்களால் உணரப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ளும்படி 20 நாடுகள், பன்முகத்திறன் கொண்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் பயணிக்க இருக்கிறாா்கள். ஜி-20 கூட்டம் தில்லியில் மட்டுமல்லாது, தில்லிக்கு வெளியேயும் நடக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருக்கிறாா். குறிப்பாக கா்நாடகத்தின் பல பகுதிகளில் ஜி-20 கூட்டங்கள் நடக்கும். அப்போது கா்நாடகத்தின் வா்த்தக, தொழில் சிறப்புகளை விளக்கும் பொருட்களை காட்சிப்படுத்தி சிறப்பாக பிராண்டிங் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கைவினப்பொருட்கள், கா்நாடகத்தின் பாரம்பரிய பொருட்களை காட்சிப்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜி-20 நாடுகளின் வருகை கா்நாடகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT