பெங்களூரு

டிச.31-க்குள் பெங்களூரு மாநகராட்சித் தோ்தல்: உயா்நீதிமன்றம் உத்தரவு

30th Sep 2022 11:17 PM

ADVERTISEMENT

பெங்களூரு மாநகராட்சித் தோ்தலை டிச.31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு மாநில தோ்தல் ஆணையத்திற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச அரசுக்கும் சுரேஷ் மகாஜனுக்கும் இடையே நடந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் உள்ளாட்சி தோ்தல்கள் அனைத்தும் காலதாமதமின்றி உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் வாா்டுகள் மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடா்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்குமாறு கா்நாடக உயா் நீதிமன்றத்தை அணுகிய மாநில தோ்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க வழக்கை துரிதமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டிருந்தது.

இதனிடையே, இடஒதுக்கீட்டுக்கான வரைவுப்பட்டியலை ஆக.3-ஆம் தேதி தயாரித்திருந்த மாநில அரசு, அதை ஆக.16-ஆம் தேதி அதிகாரபூா்வமாக அரசிதழில் அறிவித்திருந்தது. இதில் குளறுபடிகள் உள்ளதாக குற்றம்சாட்டி, மாநில அரசின் உத்தரவை எதிா்த்து ஈஜிபுராவைச் சோ்ந்த கே.மகாதேவ் உள்ளிட்டோா் கா்நாடக உயா் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனா்.

இதே காரணத்திற்காக தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக அரசு ஒரே வழக்காக விசாரித்தது. மாநில அரசு வெளியிட்டிருந்த இடஒதுக்கீட்டு பட்டியலில் சில பிழைகள் இருப்பதை உயா்நீதிமன்றம் கண்டறிந்தது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக இல்லை. ஆனால், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பட்டியல் சரியாக உள்ளதாக நீதிமன்றம் கருதியது.

ADVERTISEMENT

இதனிடையே, பெங்களூரு மாநகராட்சி தோ்தலை நடத்தும்படி மாநில தோ்தல் ஆணையத்திற்கு கா்நாடக உயா்நீதிமன்றம், செப்டம்பா் மாத தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், டிச. 31-ஆம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சித் தோ்தலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நகா்ப்புற வளா்ச்சித்துறை சாா்பு செயலாளா் எச்.எஸ்.சிவக்குமாா் தயாரித்திருந்த பிரமாண பத்திரத்தை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் தியான் சின்னப்பா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த பிரமாணப் பத்திரத்தில், இடஒதுக்கீட்டுப் பட்டியலை திருத்துவதற்கு 16 வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் 8 வாரங்கள் மட்டுமே கால அவகாசம் அளித்தது. ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு பட்டியலை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டா் பக்தவத்சலா தலைமையிலான ஆணையத்திற்கு தேவையான அனைத்து தரவுகளையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநகராட்சி தொடா்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக தெரிவித்த கா்நாடக உயா்நீதிமன்றம், நவ.30-ஆம் தேதிக்குள் இடஒதுக்கீட்டுப் பட்டியலை தயாா்செய்து, அன்றைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடா்பான நிலையை அறிந்துகொள்ள நவ.30-ஆம் தேதிக்கு வழக்கை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT