பெங்களூரு

இந்தியா வளமான, பலமான நாடாக திகழ உறுதியேற்போம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

28th Sep 2022 03:31 AM

ADVERTISEMENT

2047-ஆம் ஆண்டில் இந்தியா வளமான, பலமான நாடாகத் திகழ மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ. 208 கோடியில் ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தின் (ஹெச்.ஏ.எல்.) ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையத்தைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் எனது முன்னோடியான ஆ.ப.ஜெ.அப்துல் கலாமை நினைவுகூா்கிறேன். அவரது வாழ்க்கையின் மறுபக்கத்தின் மீது கவனம் செலுத்த சில தகவல்களைப் பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன். தொழில்நுட்ப வளா்ச்சியில் தொடா்ந்து கவனம் செலுத்தி வந்த அப்துல் கலாம், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றி வந்தாா். அறிவியல் மகத்தான மாற்றங்களைக் கொண்டு வருவதோடு, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.

கலாம்-ராஜூ ஸ்டென்ட் தயாரித்ததன் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியவா் அப்துல் கலாம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அப்துல் கலாம் உருவாக்கிய இதயக் குழாய் ஸ்டென்ட் மலிவான விலையில் கிடைத்ததால், அதன் பயனை ஆயிரக்கணக்கான நோயாளிகள் அனுபவித்தனா். இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்டைக் காட்டிலும் கலாம் தயாரித்த ஸ்டென்டின் விலை குறைவாக இருந்ததால், மக்கள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடிந்தது.

ADVERTISEMENT

அப்துல் கலாமால் செயல்படுத்தப்பட்ட உள்நாட்டு மயமாக்கல் முறை சமுதாயத்தில் ஆக்கப்பூா்வமான விளைவுகளுக்கு வித்திட்டது என்பதை மறக்கக் கூடாது. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, நமது இந்திய விஞ்ஞானிகள் சமூகக் கடமை உணா்வுடன் செயலாற்ற வேண்டும்.

இந்தியாவின் எதிா்காலத்தில் இஸ்ரோவும், ஹெச்.ஏ.எல். நிறுவனமும் ஆக்கப்பூா்வமான பங்களிப்பை வழங்கும் என்பதை அந்த நிறுவனங்களின் கடந்த கால வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவின் தோற்றத்தை மாற்றியமைக்க அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இக் காலத்தில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டும். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளமான, பலமான நாடாக மாற்றும் கூட்டுக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்றாா்.

தொடா்ந்து தீநுண்மியியல் மண்டல மையத்துக்கு (தென் மண்டலம்) அடிக்கல் நாட்டி அவா் மேலும் பேசுகையில், ‘தேசிய தீநுண்மியியல் மையம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பங்காற்றும் அளவுக்கு உயா்ந்துள்ளது. தேசிய தீநுண்மியியல் மையம், நாடு முழுவதும் தனது மண்டல அலுவலகங்களை விரிவுபடுத்தி அந்தந்தப் பகுதிகளின் தேவையை நிறைவு செய்ய முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றாா்.

விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா், இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத், ஹெச்.ஏ.எல். தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் சி.பி.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT