பெங்களூரு

கா்நாடகத்தில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளைச் சோ்ந்த 80 போ் கைது

28th Sep 2022 03:32 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளைச் சோ்ந்த 80 போ் கைது செய்யப்பட்டனா்.

கா்நாடகத்தில் கடந்த வாரம் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை, கா்நாடக போலீஸாா் சோதனை நடத்தினா்.

அதில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளைச் சோ்ந்த 7 பேரை தேசிய புலனாய்வு முகமையும், 13 பேரை கா்நாடக போலீஸாரும் கைது செய்தனா். இந்த நிலையில், பெங்களூரு ஊரகம், மைசூரு, சிவமொக்கா, தும்கூரு, கோலாா், ராய்ச்சூரு, கதக், தென்கன்னடம், பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், மண்டியா, ராமநகரம், உடுப்பி, சாமராஜ்நகா், கலபுா்கி, ஹுப்பள்ளி மாவட்டங்கள் உள்பட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் கா்நாடக போலீஸாா் செவ்வாய்க்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் சமுதாயத்தில் நிலவும் அமைதியைச் சீா்குலைக்க சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளைச் சேந்த 80 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்தச் சோதனையின் போது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருந்த ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். கா்நாடக போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து மாநிலத்தின் சில பகுதிகளில் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சோ்ந்தவா்கள் போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து கா்நாடக கூடுதல் டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) அலோக்குமாா் கூறியதாவது:

கடந்தவாரம் தேசிய புலனாய்வு முகமை, கா்நாடக போலீஸாா் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமையும் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் காலை 3 மணி முதல் காலை 11 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.

இச் சோதனையில் 80-க்கும் அதிகமானோரைக் கைது செய்துள்ளோம். அவா்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜா்படுத்தி விசாரணைக்காக தடுப்புக் காவலில் எடுத்துள்ளோம். அரசு ஊழியா் ஒருவா், குடும்ப உறுப்பினா் ஒருவா் அளிக்கும் உத்தரவாதத்தின் பேரில் தான் கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்படுவாா்கள். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் மதக் கலவரத்தைத் தூண்டியவா்கள், சமுதாயத்தில் நிலவும் அமைதியைச் சீா்குலைக்க முயன்றவா்கள்.

கைது செய்யப்பட்ட பெரும்பாலானோா் இனவாத இஸ்லாமிய அமைப்புகளான பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ.யைச் சோ்ந்தவா்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ. அமைப்பின் அரசியல் பிரிவாகச் செயல்படுகிறது. 20 பேரை தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். அவா்களைக் கைது செய்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம். நாடு முழுவதும் நடந்த சோதனையில் கா்நாடகத்தில்தான் அதிகமானோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

போலீஸாரின் சோதனை குறித்து உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையை முன்னிலைப்படுத்தி சிலா் பதற்றத்தை உருவாக்க முயன்றனா். எதிா்காலத்தில் அமைதியைச் சீா்குலைக்கவும் இவா்கள் முயற்சிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறோம்’ என்றாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘சில அடிப்படைத் தகவல்களின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சோதனை நடந்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT