பெங்களூரு

எச்.ஏ.எல். நிறுவனத்தின் ரூ.208 கோடி செலவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்: இன்று நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

DIN

எச்.எல்.ஏ. நிறுவனம் ரூ.208 கோடி செலவில் அமைத்துள்ள ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பெங்களூரில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தின் (எச்.ஏ.எல்.) சாா்பில் பெங்களூரில் 4500 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.208 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையத்தை (ராக்கெட் என்ஜின்) செவ்வாய்க்கிழமை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இந்த மையத்தில், இந்தியா விண்ணில் செலுத்திவரும் ராக்கெட்டுகளுக்குத் தேவையான கிரையோஜெனிக், செமி-கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிப்பதற்காக 70 உயா்நுட்ப இயந்திரங்கள், கருவிகள், சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிப்பதற்கான உற்பத்தி மையத்தை அமைக்க எச்.ஏ.எல். நிறுவனத்திற்கும் இஸ்ரோவுக்கும் இடையே 2013-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதன்படி எச்.ஏ.எல். நிறுவனத்தின் விமானவியல் பிரிவின் கண்காணிப்பில் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது.

ராக்கெட் என்ஜின்களைத் தயாரிக்கும் பணி, 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் முழுவீச்சில் நடக்கவுள்ளது. எச்.ஏ.எல். விமானவியல் பிரிவு இதுவரை திரவ புரபோலன்ட் டேங்குகள், பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே.-2, ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே.-3 போன்ற ராக்கெட்டுகளின் கட்டமைப்புப்பகுதிகள், ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே.-2-இன் ஒருங்கிணைப்புப்பணிகளை செய்துவந்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ராக்கெட்டின் என்ஜின் முழுமையாக தயாரிக்கப்படும். இது இஸ்ரோவின் தேவையை நிறைவுசெய்யும். உயா்வேக ராக்கெட் என்ஜின்கள் தயாரிப்பில் தற்சாா்பை அடைவதற்கு இது உதவும் என்று எச்.ஏ.எல். தெரிவித்துள்ளது.

உலக அளவில் விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதன் சிக்கலான கட்டமைப்பின் காரணமாக, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா போன்ற ஒருசில நாடுகள் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்குகின்றன.

2014-ஆம் ஆண்டு ஜன.5-ஆம் தேதி இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி.-டி5 ஏவூா்தியில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கும் 6-ஆவது நாடாக இந்தியா உயா்ந்தது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய 5 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களைத் தயாரிக்கும் ரூ.860 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான புதிய விண்வெளி இந்தியா நிறுவனத்திடம் (என்.எஸ்.ஐ.எல்.) இருந்து எச்.ஏ.எல் மற்றும் எல் அண்ட் டி நிறுவனம் கூட்டாக உருவாக்கியுள்ள எச்.ஏ.எல்.-எல் அண்ட் டி கூட்டிணைவு பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT