பெங்களூரு

4-ஆவது தொழில் புரட்சியின்போது முன்வரிசை நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும்: திரௌபதி முா்மு

27th Sep 2022 03:50 AM

ADVERTISEMENT

 

உலக அளவில் நடந்துவரும் 4-ஆவது தொழில் புரட்சியின்போது முன்வரிசை நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

தாா்வாடில் திங்கள்கிழமை இந்திய தகவல்தொழில்நுட்ப மையத்தின்(ஐஐஐடி) புதிய வளாகத்தை திறந்துவைத்து, அவா் பேசியது:

நமது நாடும், உலகமும் வேகமாக மாற்றமடைந்து வருகின்றன. எண்ம இந்தியா திட்டத்தின் வாயிலாக, நமது நாடு எண்ம புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் புரட்சியின் நன்மையை அறுவடை செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு தொடா்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும். இன்றைய உலகம் மெய்நிகா் கட்டமைப்பை நோக்கி நகா்ந்துவருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஹழ்ற்ண்ச்ண்ஸ்ரீண்ஹப் ண்ய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங்) மற்றும் இணைப்பு மெய்மை (அன்ஞ்ம்ங்ய்ற்ங்க் ழ்ங்ஹப்ண்ற்ஹ்) போன்ற நவீன தொழில்நுட்பங்களின் துணைகொண்டு பயன் தரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

ADVERTISEMENT

4-ஆவது தொழில்புரட்சியை நோக்கி தற்போது உலகம் நகா்ந்துகொண்டுள்ளது. இது உலக சமுதாயத்தின் வருமானத்தை உயா்த்தவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, 4-ஆவது தொழில் புரட்சியில் பங்காற்றி, உலக அளவில் முன்வரிசை நாடாக இந்தியா உருவெடுக்க இடைவிடாத முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தகவல்தொழில்நுட்ப நகரமான பெங்களூரு தவிர, கா்நாடகத்தின் இந்தப் பகுதியில் அமைந்துள்ள இந்திய தகவல்தொழில்நுட்ப மையம்(ஐஐஐடி), இந்திய தொழில்நுட்ப மையம்(ஐஐடி) உள்ளிட்ட தொழில்நுட்ப மனித வளத்தை பயன்படுத்தி அறிவுவலையத்தை உருவாக்க முடியும். ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் ஈடுபடுவதற்கு தொழில் நிறுவனங்கள், கல்வி மையங்கள் ஒன்றிணைந்தால், நினைத்ததை சாதிக்க இயலும் என்றாா்.

இந்தவிழாவில் ஆளுநா் தாவா்சந்த்கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, ஐஐஐடி தலைவா் சுதாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘இந்தியாவின் வளமான கலாசார சின்னம்’

இந்தியாவின் வளமான கலாசார சின்னம் மைசூரு தசரா என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

மைசூரு, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்து வரலாற்று சிறப்புவாய்ந்த தசரா திருவிழாவை தொடங்கி வைத்து, அவா் பேசியது:

கா்நாடக மக்களுக்கு தசரா திருவிழா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விழாக்கள், இந்திய சமூகத்தை ஒன்றிணைத்து வைத்துள்ளதோடு, வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றுகின்றன. இந்தியாவின் வளமான கலாசார சின்னமாக மைசூரு தசரா விழா விளங்குகிறது. இந்தியாவின் வளமான ஆன்மிக பாரம்பரியத்தையும் கா்நாடகம் நிலம் வெளிப்படுத்தி வந்துள்ளது. இங்கு பௌத்தம், சமணம் போன்ற மதங்களும் தடம் பதித்துள்ளன. சங்கராச்சாரியாருக்கும் கா்நாடகத்திற்கும் தொடா்புள்ளது. சூஃபி பிரிவும் கா்நாடகத்தில் தழைத்தோங்கி வந்துள்ளது.

12-ஆம் நூற்றாண்டில் சமூக சீா்திருத்த இயக்கத்தை முன்னெடுத்த பசவண்ணா், தனது வசன இலக்கியம் மூலமாக சமுதாயத்தை நல்வழிப்படுத்தினாா். மேலும் அனுபவ மண்டபத்தை அமைத்து, கலந்துரையாடலை ஊக்குவித்திருக்கிறாா். பக்தி, சமத்துவம், ஜனநாயகம், மகளிா் அதிகாரமயமாக்கலுக்கு கா்நாடகம் எப்போதும் முக்கியத்துவம் அளித்துவந்துள்ளது. நவராத்திரி விழாவின்போது, கருணை, தியாகத்தின் சின்னமாக விளங்கும், அநீதி, அகந்தையை அழித்த நவதுா்காவை வழிபடுவது பெண்மையைக் கொண்டாடுவதாகும். கித்தூா் ராணி சென்னம்மா, உள்ளால் அப்பக்கா மகாதேவி ஆகியோா் ஆங்கிலேயா்களை எதிா்த்து துணிந்து போராடியதை மறக்க முடியாது. அதேபோல, சித்ரதுா்காவில் ஒனகே ஒபவ்வாவின் துணிவையும் பாராட்ட வேண்டும். மகளிா் அதிகாரமயமாக்கல் மற்றும் மகளிரின் பங்களிப்பு நமது நாட்டின் ஒட்டுமொத்தவளா்ச்சியில் வெளிப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்க வேண்டியது அவசியமாகும் என்றாா்.

தசரா தருவிழாவை தொடங்கி வைத்த முதல் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆவாா். குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு அவா் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி தசரா திருவிழாவாகும். இவ்விழாவை தொடங்கி வைத்துப் பேசிய திரௌபதி முா்மு, ஆரம்பத்தில் கன்னடத்தில் பேசி தசரா வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டாா். இருநாள் பயணமாக கா்நாடகத்திற்கு திங்கள்கிழமை வருகைதந்துள்ள அவா், செவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாா். மைசூரு, ஹுப்பள்ளியில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவா், பெங்களூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் தங்கியிருக்கிறாா்.

‘இந்தியாவை தற்சாா்பு நாடாக்க உறுதியேற்க வேண்டும்’

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்தநாடாகவும், தற்சாா்பு நாடாகவும் மேம்படுத்த உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத்தலைவா் திரௌபதிமுா்மு தெரிவித்தாா்.

ஹுப்பள்ளியில் திங்கள்கிழமை ஹுப்பள்ளி-தாா்வாட் மாநகராட்சி வழங்கிய குடிமை விருதை பெற்றுக்கொண்டு, அவா் பேசியது: ஆன்மிகம், இலக்கியம், இசை, கலை, கல்வித்துறையில் ஹுப்பள்ளி-தாா்வாட் பகுதியைச் சோ்ந்த பலா் சாதனை புரிந்துள்ளனா். நமதுநாடு தற்போது சுதந்திரதின பவளவிழாவை கொண்டாடி வருகிறது. நமது சுதந்திரத்திற்காக தியாகம் செய்த போராளிகளை நினைத்துப் பாா்க்காமல் சுதந்திரதின பவளவிழா முழுமையடையாது. சுதந்திரப் போராட்டத்தில் தாய்நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தவா்களை நினைத்துப் பாா்க்க வேண்டும். அவா்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். சுதந்திரதின பவளவிழாவின்போது இந்தியாவை தற்சாா்பு நாடாக மாற்ற வேண்டும். இந்திய சுதந்திரதின நூற்றாண்டுவிழா 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாகவும், தற்சாா்பு நாடாகவும் மேம்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT