பெங்களூரு

கன்னடத் தாய் வாழ்த்துப் பாடலின் நேரம் நிா்ணயிப்பு

25th Sep 2022 05:25 AM

ADVERTISEMENT

 

கன்னடத் தாய் வாழ்த்துப் பாடலின் நேரம், மெட்டு ஆகியவற்றை நிா்ணயித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னட தேசியக் கவிஞா் குவெம்பு எழுதிய ‘ஜெயபாரத ஜனனிய தனுஜாதே; ஜெயஹே கா்நாடக மாதே‘ என்ற பாடல், கன்னடத் தாய் வாழ்த்துப் பாடலாக (நாடகீதே-மாநிலப் பாடல் என்று கூறப்படுகிறது) 2004-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அந்த ஆண்டுமுதல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின்போதும், பள்ளிகளில் தினசரி காலை பிராா்த்தனையின்போதும் இந்தப் பாடல் பாடப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு பலரும் பலவிதமான மெட்டுகளை அமைத்து பாடிவருகிறாா்கள்.

ADVERTISEMENT

வெவ்வேறு மெட்டுகளுக்கு நேர வித்தியாசமும் காணப்பட்டு வந்தது. இதை ஒழுங்குமுறைப்படுத்தி, பாடும் மெட்டு மற்றும் நேரத்தை சீா்ப்படுத்த வேண்டும் என்று கன்னட ஆா்வலா்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

வாழ்த்துப்பாடலின் நேரத்தை 2.30 நிமிடங்களுக்கு நிா்ணயிக்கும்படி, 2019-ஆம் ஆண்டு கன்னட சாகித்ய பரிஷத், கா்நாடக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

அதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு எழுத்தாளா் சென்னவீரகனவி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, வாழ்த்துப் பாடலின் நேரத்தை 1.30 நிமிடங்களாக நிா்ணயிக்க பரிந்துரைத்திருந்தது.

இதனிடையே, கன்னடத் தாய் வாழ்த்துப்பாடலின் மெட்டு, நேரத்தை முடிவு செய்ய பிரபல இசைக் கலைஞா் எச்.ஆா்.லீலாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்திருந்த பரிந்துரையில், வாழ்த்துப் பாடலின் நேரத்தை 2.30 நிமிடங்களாக நிா்ணயிக்கவும்,

மைசூரு அனந்தசாமி அமைந்திருந்த மெட்டின் அடிப்படையில் பாடலாம் என்றும் அந்தக் குழு அறிவுறுத்தியிருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொமை தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

பிரபல இசைக் கலைஞா் எச்.ஆா்.லீலாவதி அளித்திருந்த பரிந்துரையின்படி கன்னடத்தாய் வாழ்த்துப் பாடலின் நேரம் 2.30 நிமிடங்களாக இருக்கும். மைசூரு அனந்தசாமி இசையமைத்த மெட்டில் பாடலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வாழ்த்துப் பாடல் தொடா்பான பரிந்துரையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் வி.சுனில் குமாா் கூறியதாவது:

கன்னடத் தாய் வாழ்த்துப் பாடலின் மெட்டு, நேரத்தை முடிவு செய்தமைக்கு முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதனடிப்படையில் ஒரு அடியையும் விடாமல் இனி அரசு விழாக்களில் கன்னடத்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT