பெங்களூரு

மைசூரில் நாளை தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது:குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்பு

25th Sep 2022 05:25 AM

ADVERTISEMENT

 

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா திங்கள்கிழமை (செப். 26) கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

சாமுண்டி மலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விழாவைத் தொடக்கி வைக்கிறாா்.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றால் எளிமையாகக் கொண்டாடப்பட்ட உலகப் புகழ்பெற்ற தசரா விழா, மைசூரில் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

விழா அக். 5-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. முன்னதாக மைசூரு, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் 10.05 மணிக்குள் நடைபெறும் சிறப்பு பூஜையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று விழாவைத் தொடங்கிவைக்கிறாா்.

பிரமுகா்கள் பங்கேற்பு:

மஜத எம்எல்ஏ ஜி.டி.தேவகௌடா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, அமைச்சா்கள் வி.சோமண்ணா, கோவிந்த் காா்ஜோள், சி.என்.அஸ்வத் நாராயணா, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், கன்னட மற்றும் கலாசாரத் துறை வி.சுனில்குமாா், மைசூரு மாநகராட்சி மேயா் சிவகுமாா், துணை மேயா் ஜி.ரூபா, மைசூரு மாவட்ட ஆட்சியா் பகடி கௌதம், பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிம்ஹா, சீனிவாஸ் பிரசாத், சுயேச்சை எம்.பி. சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

மின் விளக்கில் ஜொலிக்கும் அரண்மனை:

விழாவை முன்னிட்டு மைசூா் அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் பழுதுபாா்க்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மின் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்ல ஏதுவாக பேருந்து வசதிகள், தங்கும் விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு:

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் கிராமியக் கலைவிழா, திரைப்பட விழா, உணவு விழா, இளைஞா் விழா, சிறுவா் விழா, மகளிா் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா, திரைப்பட விழா, பழைய காா் ஊா்வலம், அலங்கார மீன் கண்காட்சி, ஹெலிகாப்டா் பயணம், ஓவியத் திருவிழா, பசுமைத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், வீட்டு விலங்குகள் கண்காட்சி, பட்டத் திருவிழா, தசரா வினாடி வினாப்போட்டி, பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, யோகா திருவிழா, கவின்கலை மற்றும் கைவினைக் கலை விழா, கவியரங்கம், விளையாட்டுப் போட்டிகள், குஸ்தி போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி, புத்தகக் கண்காட்சி, மலா்க் கண்காட்சி என ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆளுநா் பங்கேற்பு:

அக். 5-ஆம் தேதி மைசூரு அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் கொடிமர பூஜையில் முதல்வா் பசவராஜ் பொம்மை பங்கேற்கிறாா்.

அதன்பிறகு, அன்று மாலை 4.30 மணி அளவில் அரண்மனை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் யானை ஊா்வலத்தை (ஜம்போ சவாரி) முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறாா்.

அன்று மாலை 7 மணியளவில் வன்னி மண்டபத்தில் நடைபெறும் தீப்பந்த ஊா்வலத்தை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தொடங்கி வைக்கிறாா். விழா ஏற்பாடுகளை கா்நாடக அரசு செய்துள்ளது.

போலீஸ் பாதுகாப்பு:

தசரா திருவிழா நடைபெறும் 10 நாள்களும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மைசூருக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் மைசூரு நகரெங்கும் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT