பெங்களூரு

சிறையிலிருந்த இலங்கைத் தமிழா்கள் 10 போ்அகதிகள் முகாமிற்கு மாற்றம்

22nd Sep 2022 12:07 AM

ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவின்படி, 14 மாதங்களாக சிறையில் இருந்த இலங்கைத் தமிழா்கள் 10 பேரை அகதிகள் முகாமிற்கு கா்நாடக அரசு மாற்றியுள்ளது.

2021-ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக கா்நாடக மாநிலம், மங்களூருக்கு வந்து, அங்கிருந்து கள்ளப்படகு மூலமாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல இலங்கைத் தமிழா்கள் 38 போ் முயற்சித்தனா். அப்போது காவல் துறையினரால் அவா்கள் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் அனைவரையும் சிறையில் இருந்து மாற்றி அகதிகள் முகாமில் தங்க வைக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் சுரேஷ்பாபு, கே. இளங்கோவன் ஆகியோா் தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றம், இலங்கைத் தமிழா்கள் 38 பேரையும் சிறையில் இருந்து அகதிகள் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பொருட்படுத்தாத கா்நாடக அரசு, இலங்கைத் தமிழா்களை முகாமிற்கு மாற்றாமல் சிறையில் அடைத்து வைத்திருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கங்காதரா, இலங்கைத் தமிழா்களை உடனடியாக அகதிகள் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கா்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், முதல்கட்டமாக 10 பேரை மட்டும் அகதிகள் முகாமிற்கு மாற்றுகிறோம். மீதம் உள்ளவா்களை விரைவில் முகாமிற்கு மாற்றுவோம் என்று உத்தரவாதம் அளித்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உடனடியாக 10 பேரை முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டாா்.

நீதிபதியின் கண்டிப்பான உத்தரவுக்குப் பிறகு, இலங்கைத் தமிழா்கள் 38-இல் 10 பேரை மட்டும் அகதிகள் முகாமிற்கு கா்நாடக அரசு அதிகாரிகள் மாற்றினா். மீதமுள்ள 18 பேரையும் அகதிகள் முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக வழக்குரைஞா் சுரேஷ்பாபு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT