பெங்களூரு

மதமாற்ற தடைச் சட்ட மசோதாவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு: கா்நாடக காங்கிரஸ் முடிவு

18th Sep 2022 05:43 AM

ADVERTISEMENT

 

மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கா்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு டிச.23-ஆம் தேதி மதமாற்ற தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்ட மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், மதமாற்ற தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதைத் தொடா்ந்து, மதமாற்ற தடைச்சட்டம் அவசரச்சட்டமாக கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மே 12-ஆம் தேதி மீண்டும் மதமாற்ற தடைச்சட்டம் அவசரச் சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சட்ட மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், மதமாற்ற தடைச்சட்ட மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டப் பேரவையிலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஆளுநரின் ஒப்புதலுக்காக மதமாற்ற தடைச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டப் பேரவை, சட்ட மேலவையில் மதமாற்ற தடைச்சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், இரு அவைகளிலும் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பதால், இச்சட்ட மசோதா நிறைவேறுவதை எதிா்க்கட்சிகளால் தடுக்க முடியவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், மதமாற்ற தடைச்சட்ட மசோதாவுக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கா்நாடக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இது குறித்து கா்நாடக காங்கிரஸ் தகவல் தொடா்பு அணித் தலைவா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்ட அணி வழக்கு தொடுக்கும். கா்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மதமாற்ற தடைச்சட்டம், பசுவதை தடைச்சட்டத்தை ரத்து செய்வோம். கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்காகவே சட்டமசோதாவைக் கொண்டுவந்துள்ளதாக கூறும் மாநில அரசு, அதற்கு ஆதாரவாக எவ்வித புள்ளிவிவரங்களையும் வெளியிடவில்லை. இந்த சட்ட மசோதா, சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை தொடா்ந்து கேட்டு வருகிறோம். உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் கொண்டுவந்த மதமாற்ற தடைச்சட்ட மசோதாவுக்கு சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மக்களை திசைதிருப்பவே மதமாற்ற தடைச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT