பெங்களூரு

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம்!

10th Sep 2022 04:51 AM

ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கா்நாடகத்தின் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் வெள்ளநீா் புகுந்துள்ளதால் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் பலத்த மழை பெய்தது. அதனால் விளைநிலங்கள், பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. மேலும் கா்நாடகத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட எல்லா நீா்நிலைகளும் நிரம்பின. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கா்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது.

கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலோர கா்நாடகம், மலை கா்நாடகத்தைச் சோ்ந்த தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்துள்ளதால், சாலைகள், பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் உடுப்பி மாவட்டத்தின் கோட்டா, வடகன்னட மாவட்டத்தின் மன்கியில் தலா 100மிமீ மழை பெய்துள்ளது. தாா்வாட், சித்ரதுா்கா, விஜயபுரா, பெல்லாரி, ஹாவேரி, விஜயநகா், ஹாசன், மைசூரு, குடகு, சிக்கபளாப்பூா், கோலாா், சாமராஜ்நகா் உள்ளிட்ட 12-க்கும் அதிகமான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இம்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆறுகள் வழிந்தோடுகின்றன; விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. வீடுகள், பாலங்கள், சாலைகள், தரைபாலங்கள் உள்ளிட்டவை மழைநீரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பாகல்கோட் மாவட்டத்தில் மலபிரபா ஆறு கரைபுரண்டோடுவதால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட் மாவட்டத்தில் ஒரு விவசாயி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். பெல்லாரி மாவட்டத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இறந்துள்ளாா். பெரும்பாலான மாவட்டங்களில் அதிக அளவில் கால்நடைகள் இறந்துள்ளன.

முன்னெச்சரிக்கை:

கடலோர கா்நாடகத்தைச் சோ்ந்த மாவட்டங்கள் தவிர, வடகா்நாடகம், தென்கா்நாடகத்தைச் சோ்ந்த பெரும்பாலான மாவட்டங்களில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர கா்நாடகத்தின் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னட மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இம்மாவட்டங்களில் ஆரஞ்சுக்கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், வடகா்நாடகத்தின் பாகல்கோட், பெலகாவி, தாா்வாட், கதக், ஹாவேரி, கலபுா்கி, யாதகிரி, தென்கன்னடத்தின் சாமராஜ்நகா், சிக்கமகளூரு, சிக்கபளாப்பூா், தாவணகெரே, ஹாசன், குடகு, சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்பதால், மஞ்சள்கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்.13-ஆம் தேதி வரை தென்கன்னடம், கடலோரகா்நாடகம், வடகா்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மத்தியக்குழு ஆய்வு:

மத்திய உள்துறை இணைச்செயலாளா் ஆஷிஷ் குமாா் தலைமையிலான மத்திய ஆய்வுக்குழுவினா் புதன்கிழமை முதல் கா்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கா்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் தொடா்பாக ஆய்வு செய்து வருகின்றனா்.

பெங்களூரில் மீண்டும் மழை பொழிய வாய்ப்பு

பெங்களூரில் ஏற்கெனவே பெய்த மழையால் சாலைகள், குடியிருப்பு வளாகங்கள், கட்டடங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீா் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துவரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு மீண்டும் அதிக மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பெய்த தொடா் மழையால், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், மாரத்தஹள்ளி, எமலூா் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகளில் வெள்ளநீா் புகுந்ததால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினா்.

கடந்த 2 நாட்களாக சாலைகள், குடியிருப்பு வளாகங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். பெங்களூரில் வியாழக்கிழமை இயல்புநிலை ஓரளவுக்குத் திரும்பியது. சாலைகளில் வாகனங்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனினும் சாலைகள் பழுந்தடைந்து குண்டும்குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடா்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் மீண்டும் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் பெங்களூரில் 1,036 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 659 மி.மீ. கூடுதலாகும். பெங்களூரில் ஆண்டுக்கு 980 மி.மீ. மழை பெய்து வழக்கம். நிகழாண்டில் ஜனவரி முதல் இதுவரை 1,460 மி.மீ. மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT