பெங்களூரு

தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க மாணவா்கள் கைகோக்க வேண்டும்: ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

9th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க மாணவா்கள்கைகோக்க வேண்டும் என்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கியபிறகு, அவா் பேசியது:

வேளாண்மை, அது சாா்ந்த துறைகளின் வளா்ச்சிக்காகவும், வேளாண்மையை லாபகரமாக்கவும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்தியா தற்சாா்புநிலையை அடைய வேண்டும். வேளாண் துறையில் உலகளாவிய சக்தியாக மாறுவதற்கு வேளாண்மை, கால்நடை, உணவு பதனிடுதல் துறைகளை நவீனமாக்க கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். இந்தியாவின் முக்கியமான தொழில் வேளாண்மைதான். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறாா்கள். பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனா். இந்தியாவின் வேளாண்மை இன்னும் மழையை நம்பிக்கொண்டுள்ளது. மொத்தவிளைநிலங்களில் மூன்றில் இருபங்கு மழையை நம்பியுள்ளன. ஒவ்வொரு நீா்த்துளியில் இருந்தும் அதிகளவிலான விளைச்சலைப் பெற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு, இயற்கை வேளாண்மை, நாட்டுவிதைகள் போன்றவற்றில் அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் இஸ்ரேல் சென்று அங்குள்ள வேளாண்முறைகளை கண்டறிந்து வந்தேன். இஸ்ரேல் நாட்டின் தட்பவெப்பம் மற்றும் நிலப்பரப்பு விவசாயத்திற்கு உகந்ததாக இல்லை. ஆனாலும், வேளாண் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. சொட்டுநீா்ப் பாசனத்தை பயன்படுத்தி வேளாண்மையை அந்நாடு நவீனமாக்கியுள்ளது. மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க இயற்கை வேளாண்மை பேருதவியாக இருக்கிறது. வேதி உரமிட்டு செய்யும் பயிரின் விளைச்சலை காட்டிலும் இயற்கை வேளாண்மையில் கூடுதல் மகசூல்கிடைக்கிறது.

ADVERTISEMENT

பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவு தவிர, இளம் தலைமுறைக்கு ஊக்கசக்தியாகவிளங்கவும், தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்கவும் மாணவா்கள் கைகோக்க வேண்டும் என்றாா்.

விழாவில் வேளாண் அறிவியல் அறக்கட்டளைத் தலைவா் ஆா்.எஸ்.பரோட், வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல், துணைவேந்தா் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT